சிங்கப்பூரில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அல்லது 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டு வேலையிட மரணங்கள் குறைந்தன.
அதேநேரம் காயமடைந்தோர் எண்ணிக்கை ஐந்து ஆண்டு காணாத உச்சத்தைத் தொட்டது.
மொத்தம் 39 வேலையிட மரணங்கள் கடந்த ஆண்டு நிகழ்ந்தன. இது 100,000 ஊழியருக்கு 1.1 மரணம் என்னும் விகிதம் ஆகும். 2018ஆம் ஆண்டில் 41 மரணங்கள் நிகழ்ந்தன. இதன் விகிதம் 1.2 ஆகும் என வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் 2019 அறிக்கை தெரிவித்தது. அவ்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த மரணங்களுக்கு மூன்று சம்பவங்கள் முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. கட்டமைப்பு மற்றும் சாதனங்களின் கோளாறு அல்லது செயலிழப்பு, வாகனம் தொடர்பான சம்பவங்கள், உயரத்திலிருந்து கீழே விழுதல் ஆகியன அச்சம்பவங்கள்.
ஒவ்வொரு சம்பவத்திலும் ஏழு மரணங்கள் நிகழ்ந்ததாக அறிக்கை கூறுகிறது.
துறைவாரியான கணக்கில் கட்டுமானத் துறையில் அதிக மரணங்கள் நிகழ்ந்தன.
கடந்த ஆண்டில் அத்துறை தொடர்பான 13 மரணங்கள் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்த
படியாக போக்குவரத்து மற்றும் கிடங்கு துறை. எட்டு மரணங்கள் அத்துறையில் நிகழ்ந்தன.
கடுமையான உடற்காயங்கள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு வேலையிடத்தில் காயமுற்றதாக 629 சம்பவங்கள் பதிவாகின. இது 2018 ஆம் ஆண்டைக் காட்டிலும் 33 அதிகம். கடந்த ஆண்டு காயமடைந்தோர் விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 18.1.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அந்த ஆண்டில் 100,000 ஊழியர்களுக்கு 20 என்னும் விகிதத்தில் வேலையிட காயமடைந்த சம்பவங்கள் பதிவாகின.
கடுமையான காயங்கள் என்ன என்பதை மனிதவள அமைச்சு வரையறுத்து உள்ளது. உடற்பாகம் இழப்பு, உடற்பாகம் செயல் இழப்பு அல்லது குறைந்தபட்சம் 20 நாட்கள் மருத்துவ விடுப்புத் தேவைப்படும் அளவிலான காயம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கட்டுமானத்துறையில் 25 சம்பவங்களும் ஓட்டுநர் பணியில் 23 சம்பவங்களும் துப்புரவுப் பணியில் 19 சம்பவங்களும் காயமடைந்த சம்பவங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இயந்திரங்கள் தொடர்பான சம்பவங்களிலும் சிலர் காயமுற்றனர்.

