உடற்குறையுள்ளவர்களுக்காக இன்னும் அதிகமாக அனைவரையும் உள்ளடக்கிய ஊழியரணியை உருவாக்க 100க்கும் மேற்பட்ட முதலாளிகள் கடப்பாடு தெரிவித்துள்ளனர். அதற்கென வேலைத்திறன் அதிபர் சவால் பற்றுறுதியில் அவர்கள் கையெழுத்திட்டனர்.
லெங்கோக் பாருவில் உள்ள எனேபளிங் வில்லேஜில் நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் தொடங்கி வைத்த நிகழ்வில் அதிபர் அலுவலகமும் பொதுச் சேவைத் துறையும் பற்றுறுதியில் முதலில் கையெழுத்திட்டன.
இங்குள்ள வேலையிட கலாசாரத்தில் மாற்றம் கொண்டுவரப்படுவதன் மூலம் உடற்குறையுள்ளோரைத் தங்களது சக ஊழியர்களாக வரவேற்க பலர் முன்வருவார்கள் என்று நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய அதிபர் குறிப்பிட்டார்.
பற்றுறுதியில் கையெழுத்திட்டதன் மூலம், உடற்குறை உள்ள ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து, வேலைக்கு நியமித்து மற்றவர்களுடன் ஒருங்கிணையச் செய்யும் முயற்சிகளில் முதலாளிகள் ஆதரவைப் பெறுவர்.
சிங்கப்பூரில் 15 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட உடற்குறையுள்ளோரில் 25 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருவதாக மனிதவள அமைச்சு கடந்த ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவித்தது.

