கடந்த ஆண்டில் சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு நிலவரம் ஒட்டுமொத்தத்தில் எதிர்பார்ப்பை மிஞ்சிவிட்டதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் குறைந்து வரம்புக்குள் இருந்து வருவதகக் குறிப்பிட்ட திருவாட்டி டியோ, உள்ளூர்வாசிகளுக்கான வேலைவாய்ப்பு முந்தைய 2018ஆம் ஆண்டைக் காட்டிலும் சற்றே அதிகரித்துள்ளதாகவும் ஆட்குறைப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் சொன்னார்.
வேலைச் சந்தை குறித்த அண்மைய தரவுகளை மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்டது.
கடந்த ஆண்டில் உள்ளூர்வாசிகளுக்கான வேலைகளின் எண்ணிக்கை 28,300 கூடியது. 2018ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி 27,400ஆக இருந்தது.
அதேபோல, பணிப்பெண்கள் தவிர்த்த வெளிநாட்டவர்களுக்கான வேலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 2018ல் 10,900ஆக இருந்த அந்த எண்ணிக்கை, 2019ல் 28,700ஆக உயர்ந்தது. கட்டுமானத் துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். அதே நேரத்தில், சென்ற ஆண்டில் சிங்கப்பூரர்களுக்கான வேலையின்மை விகிதம் 3.3% என சற்றே அதிகரித்தது. முந்தைய 2018ஆம் ஆண்டில் இவ்விகிதம் 3 விழுக்காடாக இருந்தது. உள்ளூர்வாசிகளுக்கான இவ்விகிதம் 2.9 விழுக்காட்டில் இருந்து 3.1 விழுக்காடாகவும் வெளிநாட்டு ஊழியர்களையும் சேர்த்துக்கொண்டால் 2.1 விழுக்காட்டில் இருந்து 2.3 விழுக்காடாகவும் ஏற்றம் கண்டன.
ஒட்டுமொத்தத்தில், பணிப்பெண்களைத் தவிர்த்து, சென்ற ஆண்டில் புதிதாக 57,000 வேலைகள் உருவாக்கப்பட்டன. 2018ல் இந்த எண்ணிக்கை 38,300ஆக இருந்தது.
2018ல் 10,730ஆக இருந்த ஆட்குறைப்பு 2019ல் 10.690 என சற்றே குறைந்தது. கடந்த ஆண்டு ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களில் 73.6 விழுக்காட்டினர் 'பிஎம்இடி' எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் பிரிவினர்.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட உள்ளூர்வாசிகளில் 64 விழுக்காட்டினருக்கு ஆறு மாதங்களுக்குள் புதிய வேலைகள் கிடைத்தன. முந்தைய 2018ஆம் ஆண்டில் இவ்விகிதம் 63 விழுக்காடாக இருந்தது.

