கடந்த திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வீட்டிலேயே இருக்கும்படி 7,000க்கும் மேற்பட்டோருக்கு குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புகைப்படங்கள் அல்லது கைபேசியின் வழி ஜிபிஎஸ் மூலம் தங்கள் இருப்பிடத்தை அதிகாரிகளுக்கு அவர்கள் நிரூபிக்க வேண்டும்.
வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டோருக்கு ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களளில் குறுந்தகவல் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறுந்தகவல் அனுப்பப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்ட தனிப்பட்ட இணைய இணைப்பைப் பயன்படுத்தி கைபேசியில் உள்ள ஜிபிஎஸ் வசதியின் வாயிலாக தங்கள் இருப்பிடத்தை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாது, வீட்டிலியே இருக்க உத்தரவிடப்பட்டோருடன் அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வர்.
அதிகாரிகள் அவர்களது வீடுகளுக்குச் சென்று அவர்கள் அங்கு இருக்கிறார்களா என்று கண்காணிப்பர், குறுந்ததகவல், தொலைபேசி அழைப்புகளுக்குப் பதலளிக்காதவர்களுக்கும் இது பொருந்தும்.
சீனாவிலிருந்து திரும்பும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால விசா வைத்திருப்போர், வொர்க் பர்மிட் வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான இந்த வீட்டிலேயே இருக்கும் திட்டம் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டோர் 14 நாட்களுக்கு எந்நேரமும் தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். சிங்கப்பூரில் கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமி பரவும் அபாயத்தை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டாய விடுப்பைவிட இந்த வீட்டிலேயே இருக்கும் உத்தரவு கடுமையானது.
கட்டாய விடுப்பின்கீழ் இருப்போர் உணவு, இதர அத்தியாவசியப் பொருட்களை வாங்க சிறிது நேரம் வெளியே போகலாம்.
வீட்டில் தனிமைப்படுத்தும் ஆணையின்கீழ் இருப்போர் ஒரே வீட்டில் இருப்பவர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அல்லது பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் மற்றவர்களுக்கும் அந்த நோய் பரவும் அபாயத்தை தெரிந்தே ஏற்படுத்தினால் அது சட்டப்படி குற்றமாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரை சிறை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்தக் குற்றத்தைப் புரிவோரின் நிரந்தவாசி அந்தஸ்து, நீண்டகால விசா, சார்ந்தோருப்போர்க்கான விசா, மாணவர்களுக்கான விசா, வொர்க் பர்மிட் ஆகியவை ரத்து செய்யப்படக்கூடும்.
விதிமுறையை மீறும் ஒருவருடைய பிள்ளை சிங்கப்பூரில் உள்ள பாலர் பள்ளி, பள்ளி, அல்லது பிற கல்வி நிலையங்களில் முழுநேர மாணவராக இருந்தால் அவர்களுக்கு எதிரான ஒழுங்கின்மை நடவடிக்கை எடுக்கப்படக்கூடும். அவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் அல்லது நீக்கப்படலாம்.
வெளிநாட்டு மாணவர்களின் மாணவர்களுக்கான விசா அல்லது சார்ந்திருப்போருக்கான விசா ரத்து செய்யப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

