முகக்கவச விற்பனை தொடர்பிலான மோசடியில் பெண் ஒருவர் ஏறத்தாழ $122,000 இழந்துள்ளார். கெரௌசல் இணையத்தளத்தில் வெளியான விளம்பரத்தை நம்பி அதனால் ஈர்க்கப்பட்டு முகக்கவசங்களை வாங்க குறைந்தது 600 பேர் கிட்டத்தட்ட $189,000 செலுத்தினர்.
குறைந்த விலையில் விற்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்ட அந்த முகக்கவசங்களை வாங்கி அவற்றை லாபத்துக்கு விற்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
முகக்கவசங்கள் துருக்கியில் உற்பத்தி செய்யப்பட்டு துருக்கியிலிருந்து நெதர்லாந்திலிருந்தும் கப்பல் வழியாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று விளம்பரம் செய்த பெண் தெரிவித்திருந்தார்.
ஆனால் கடைசி வரை முகக்கவசங்கள் வந்து சேராததால் விளம்பரம் செய்த பெண்ணுக்கு எதிராக அவர்கள் போலிசில் புகார் செய்தனர். கொடுத்த பணத்தை அவர் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தனர். ஆனால் அந்தப் பெண்ணும் மோசடி வலையில் சிக்கியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முகக்கவசங்களை வாங்க அவற்றை உற்பத்தி செய்ததாக கூறிக்கொண்டவர்களிடம் அவர் $122,000 செலுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
அந்தப் பெண் மோசடிக் குற்றத்தில் ஈடுபட்டதற்கான போதுமான ஆதாரம் இல்லை என்று தெரிவித்த போலிசார் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்று கூறினர்.

