புளோக் 105 டவுனர் ரோட்டில் பூன் கெங் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே நேற்றிரவு நடந்த தீச்சம்பவத்தின் தொடர்பில் 31 வயது ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இரவு சுமார் 11.10 மணிக்கு போலிசாருக்கு சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தது. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.
கைதான அந்தச் சந்தேக நபர், அவதூறு வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்ததை அருகே தங்கியிருந்த பேஸ்புக் பயனீட்டாளர் ஷென்டி கில் தெரிவித்தார்.
"அந்த ஆடவர், தான் மூட்டிய தீக்குள் தொடர்ந்து பொருட்களை வீசியதால் வெடிப்புச் சத்தம் ஒலித்துக்கொண்டிருந்தது. தீயணைப்பாளர்கள் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்தனர். சம்பந்தப்பட்ட ஆடவர் மிரட்டும் விதமாக பேசியபோதும் ஒரு தீயணைப்பாளர் தீயை அணைக்க தைரியமாக முன்வந்ததை நான் பார்த்தேன்," என்றார் திருமதி கில்.
சம்பவ இடத்திற்கு அருகே உள்ள புளோக்கு சுவரில் ஐ.எஸ் தொடர்பான வார்த்தைகள் கிறுக்கப்பட்டிருந்தன.
போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

