(காணொளி): பூன் கெங்கில் போலிஸ் சாவடிக்கு முன்பு தீ வைத்ததாக கைதான ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

(காணொளி): பூன் கெங்கில் போலிஸ் சாவடிக்கு முன்பு தீ வைத்ததாக கைதான ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

3 mins read
8e62fab2-cb90-43ff-856e-a29012869fda
பூன் கெங்கில் உள்ள மறுவடிவமைக்கப்பட்ட அதிகாரிகளற்ற காலாங் அக்கம்பக்க போலிஸ் சாவடியின் முன்பு தீ மூட்டியதாக 30 வயது ஆடவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக போலிஸ் தெரிவித்தது. படங்கள்: ஸ்டோம்ப், கெல்வின் டான் -
multi-img1 of 3

பூன் கெங்கில் உள்ள மறுவடிவமைக்கப்பட்ட அதிகாரிகளற்ற காலாங் அக்கம்பக்க போலிஸ் சாவடியின் முன்பு தீ மூட்டியதாக 30 வயது ஆடவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக போலிஸ் தெரிவித்தது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

இந்தச் சம்பவம் பயங்கரவாதச் செயலுடன் தொடர்புடையதில்லை என்றும் போலிஸ் குறிப்பிட்டது.

தனியாகச் செயல்பட்ட அந்த ஆடவர், சில பைகளில் இருந்த துணிகளைப் போட்டு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை அதன் மீது ஊற்றி தீ வைத்ததாகவும் அக்கம்பக்க போலிஸ் சாவடியின் கண்ணாடிக் கதவை நொறுக்கியதாகவும் போலிசார் தெரிவித்தனர்.

போலிஸ் சாவடிக்கு அருகில் இருந்த பல தூண்களில் அவர் ISIS என கிறுக்கியிருந்தாலும் அந்த ஆடவர் 'சமூக ஏற்றத்தாழ்வின் தொடர்பில் வருத்தப்படும் மனக்குறையுடைய ஆள்' என்பதை முதல்கட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக போலிசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரரான சிவ பிரகாஷ் மயில்ராவணன் எனும் அந்த ஆடவர் மீது தீ வைக்கும் செயல் புரிந்ததாக இன்று (மார்ச் 14) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மேல் விசாரணைக்காக அவர் காவலில் வைக்கப்படுவார் என்றும் மனநலப் பரிசோதனைக்கு அவரை அனுப்புவதற்கான நீதிமன்ற ஆணையை போலிசார் கோருவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று பின்னிரவு நேரத்தில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ISIS என்ற கிறுக்கல்கள் மூன்று இடங்களில் காணப்பட்டதாகவும் இழிவான கிறுக்கல்கள் சில, அந்த போலிஸ் சாவடியைச் சுற்றியிருந்த கீழ்த்தளச் சுவர்களில் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டது. புளோக் 105 டவ்னர் ரோட்டில் இருக்கும் அந்த போலிஸ் சாவடியின் கண்ணாடி கதவு நொறுங்கியிருந்ததாகவும் அது குறிப்பிட்டது.

நேற்று இரவு 11 மணியளவில் போலிஸ் சாவடியிலிருந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

அருகில் உள்ள பூன் கெங் எம்ஆர்டி நிலையத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 17 வயதான ரெனீ சியோங் என்பவர், போலிஸ் சாவடியின் முன்பு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததைக் கண்டதாகச் சொன்னார்.

போலிஸ் சாவடிக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றுக்குச் சென்ற ஓர் ஆடவர், அங்கிருந்த சாயம் தெளிப்பாளை எடுத்து வந்து ISIS என்று அருகில் இருந்த சுவரில் கிறுக்கியதைப் பார்த்ததாக குமாரி சியோங் கூறினார்.

பல சுவர்களில் அவ்வாறு கிறுக்கிய பிறகு, லாரியிலிருந்து குதித்த அந்த ஆடவர், போக்கர் விளையாட்டு அட்டைகளை தரையில் வீசியதாக குமார் சியோங் சொன்னார். அந்த ஆடவரின் லாரியிலிருந்து இசை முழங்கிக்கொண்டிருந்ததையும் குறிப்பிட்ட அவர், சுமார் 5 வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகச் சொன்னார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. அதில் ஒரு காணொளியில், ஆடவர் ஒருவர் சட்டையைக் கழற்றி வீசுவதையும் கையில் கத்தி போன்று காணப்படும் ஒரு பொருளைக் கையில் வைத்திருப்பதையும் அவருக்குப் பின்னால், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதையும் காண முடிந்தது.

மறுவடிவமைக்கப்பட்ட அதிகாரியில்லா அக்கம்பக்க போலிஸ் சாவடி அது என்று ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹெங் சீ ஹவ் கூறினார்.

யாருக்கும் காயமில்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்த வட்டாரம் பாதுகாப்பாக இருப்பதை போலிசார் உறுதிப்படுத்துவர் என்று சம்பவ இடத்தில் இருந்தவர்களிடம் கூறினார்.

'ஏரோசெல் கேன்'களும் தீயில் இருந்ததாகக் கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், தண்ணீர்க் குழாய், காற்று நுரை முதுகுப்பைகள், தீயணைப்பு இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டு தீ அணைக்கப்பட்டதாகக் கூறினர்.

அந்த ஆடவர் தீ வைத்தது நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் போன்றவை விதிக்கப்படலாம்.

#தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்