தேர்தல் தொகுதி எல்லை அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த கேள்வி எழுந்து உள்ளது.
மார்ச், ஏப்ரலுக்கு இடையே அல்லது மே, ஜூன் நடுப்பகுதிக்கு இடையே தேர்தல் நடத்தப்படலாம் என அரசியல் கவனிப்பாளர்கள் கணிக்கின்றனர். கொவிட்-19 கிருமி பரவல் சம்பவங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் குறைவு எனத் தெரிகிறது.
தேர்தல் தொகுதி எல்லை அறிக்கை எதிர்பார்க்கப்பட்டதைவிட முன்னதாக வெளியாகி உள்ளதால், மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என 'சிம் குளோபல் எடுகேஷன்' பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக பணிபுரியும் டாக்டர் ஃபெலிக்ஸ் டான் கணித்துள்ளார்.
"தேர்தலை நடத்தி முடித்துவிட அரசாங்கம் விரும்பும். அப்போதுதான் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அது கவனம் செலுத்த முடியும்," என்று அவர் கூறினார்.
கிருமித்தொற்று உருவெடுப்பதற்கு முன்னதாகவே, இவ்வாண்டுதான் தேர்தல் நடைபெறும் என்று வாக்காளர்கள் எதிர்பார்த்து இருந்ததைச் சுட்டிய அவர், "காத்திருப்பு ஆட்டத்தை விளையாடுவதில் இனி அர்த்தம் இல்லை" என்றார்.
கீழ்க்காணும் மூன்று தேதிகளில் ஏதேனும் ஒன்றில் தேர்தல் நடத்தப்படலாம் எனக் கணிக்கப்படுகிறது.
முதலாவது, ஏப்ரல் 18ஆம் தேதி. ஏப்ரல் மாதத்தில் சமய நிகழ்வுகள் சில இடம்பெறுகின்றன. வாரயிறுதி நாளான ஏப்ரல் 18, வாக்களிப்பு நடத்த ஒரு பொருத்தமான தேதியாகும்.
இதன்மூலம், ஈஸ்டர் தினம் இடம்பெறும் வாரயிறுதியை (ஏப்ரல் 11-12) தவிர்ப்பதோடு, முஸ்லிம்கள் நோன்பு வைக்கும் மாதமான ரமலான் தொடங்குவதற்குள் தேர்தலை நடத்திவிட முடியும். ஏப்ரல் 23ஆம் தேதி ரமலான் தொடங்குகிறது.
எனினும், ரமலான் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் மே மாதம் முதல் வாரயிறுதியில் அது இடம்பெறக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமை, மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் இடம்பெறுவதால் அதற்கு அடுத்த நாள் பிரசார ஓய்வு தினமாக அறிவிக்கப்படலாம். அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பு தினம் இடம்பெறலாம். 2006, 2011ஆம் ஆண்டுகளில் பொதுத் தேர்தல் மே மாத தொடக்கத்தில் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.
அப்படி மேற்கூறப்பட்ட தேதியும் கடந்துவிட்டால், ஜூன் மாத முதல் வாரயிறுதியில் தேர்தல் நடத்தப்படலாம். மே 24, 25 தேதிகளில் நோன்பு பெருநாள் விடுமுறை முடிந்த வுடன், தேர்தலை நடத்துவதற்கான உத்தரவாணை பிறப்பிக்கப்பட்டால், பள்ளி விடுமுறை காலமான ஜூன் 6 அல்லது 7ஆம் தேதி தேர்தல் நடக்கலாம்.
தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்ட குறைந்தது ஐந்து வேலை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.