கொவிட்-19 கிருமி பரவல் மெதுவடைவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படும் வரை சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் தொகுதி எல்லை அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கொரோனா கிருமியைக் கொள்ளைநோய் என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், தேர்தலை நடத்துவது "சமூக பொறுப்பற்றது" என்று டாக்டர் சீ கருத்துரைத்தார்.
ரத்த நன்கொடை வழங்க டோபி காட் பகுதியில் உள்ள ரத்த வங்கி ஒன்றுக்கு நேற்று தமது கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் சென்ற டாக்டர் சீ, "கொரோனா கிருமித்தொற்றிலிருந்து நமது கவனத்தைத் திசைதிருப்புவதற்கு இது சரியான தருணம் அல்ல," என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
காற்பந்து ஆட்டங்கள், மோட்டார் வாகனப் பந்தயங்கள் உள்ளிட்ட அனைத்துலக விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிய டாக்டர் சீ, சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இருப்பதாகச் சொன்னார்.
அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் நடத்தப்பட வேண்டும்.
கொவிட்-19 பரவிவரும் காலகட்டத்தில் தேர்தலை நடத்துவதில் பெரிய அளவிலான அக்கறை நிலவுவதாக டாக்டர் சீ தெரிவித்தார்.
உதாரணத்திற்கு, வாக்குச் சாவடிகளிலும் பிரசாரங்களிலும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.
தற்போதைய நிலவரத்தின்படி, கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலேயே அரசு அதன் வளங்களை முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்று டாக்டர் சீ வலியுறுத்தினார்.
கிருமி பரவி வரும் காலத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைப் போலவே மற்ற எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த நேரத்தில் தேர்தலை நடத்தினால், கிருமி பரவலைக் கட்டுப்படுத்த அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பலன் தராமல் போய்விடும் என்று எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன.