கொரோனா கிருமித்தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளியல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகளாவிய மத்திய வங்கிகளின் அவசரகாலக் கொள்கை ஒருங்கிணைப்பு ஆசிய பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற தவறிவிட்டது.
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பங்குச் சந்தை குறியீடு 5.25 விழுக்காடு சரிந்து 2,495.8ஆகப் பதிவானது. தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் 5 விழுக்காட்டுக்கும் அதிகமான சரிவைப் பதிவு செய்துள்ளன. ஆஸ்திரேலியாவின் S&P/ASX200 பங்குச் சந்தை வரலாறு காணாத சரிவைக் கண்டுள்ளது. அதன் குறியீடு இதுவரை இல்லாத 10 விழுக்காடு இறக்கம் கண்டுள்ளது.
"பங்கு சந்தை எவ்வளவு கீழே இறங்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அனைவரும் கிருமித்தொற்று சம்பவங்களுடன் மற்ற அம்சங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதற்கு முன்னர் நோய்ப் பரவல் காரணமாக பங்குகள் அதிக அளவில் மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் வரை விற்கப்பட்டுள்ளன.முதலீட்டாளர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று சிங்கப்பூரில் உள்ள யுனைடெட் ஃபர்ஸ்ட் பாட்னர்சின் ஆசிய ஆய்வுப் பிரிவின் தலைவர் திரு ஜஸ்டின் டாங் தெரிவித்தார்.

