நேற்று முன்தினம் அல்லது அதற்கு முன் விற்கப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டுகளை மறுபதிவு செய்யும்போது அதற்கான கட்டணங்கள் நீக்கப்படும். இது வரும் மே மாதம் 31ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கு மட்டுமே.
இம்மாதம் 31ஆம் தேதிக்குள்ளான தங்கள் பயணங்களை எஸ்ஐஏ வாடிக்கையாளர்கள் ரத்து செய்து வேறொரு நாளில் பயணம் செய்ய மறுபதிவு செய்துகொள்ளலாம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் கூறியது.
எல்லையில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் மேலும் இறுக்கியதை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அத்தியாவசியமில்லாத பயணங்களை ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரில் இருக்கும் அனைவரிடமும் அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவுறுத்தியது.
மறுபதிவுக் கட்டணங்கள் நீக்கப்பட்டாலும் புதிய பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தொகை சற்று வேறுபடக்கூடும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
நேற்று முன்தினத்திலிருந்து இம்மாதம் 31ஆம் தேதி வரை விற்கப்படும் புதிய பயணச்சீட்டுகளுக்குப் பயணத் தேதி மாற்றத்துக்கான கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கட்டண நீக்கக் கொள்கை தொடர்ந்து மறுஆய்வு செய்யப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
மே 31ஆம் தேதிக்குப் பிறகும் இந்தக் கட்டண ரத்து நீட்டிக்கப்படலாம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக உலகளாவிய நிலையில் விமானச் சேவைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அடுத்த சில வாரங்களுக்கு மதிப்பீடு செய்ய இருக்கிறது.
அடுத்த 72 மணி நேரங்களில் புறப்பட்டுச் செல்ல இருக்கும் விமானங்கள் தொடர்பாக மட்டுமே உதவி கேட்டு வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலம் அழைக்கலாம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
இதற்கிடையே, ரத்து செய்யப்படும் விமானப் பயணங்களுக்கு அவற்றின் பயணச்சீட்டுகளின் விலைக்குச் சமமான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று ஸ்கூட் விமானச் சேவை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு விற்கப்பட்ட பயணச்சீட்டுகளுக்குப் பதிலாக இந்தப் பற்றுச்சீட்டுகள் தரப்படும். மேலும் பயணத் தேதி மே மாதம் 31ஆம் தேதிக்குள் இருக்க வேண்டும். வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளை அடுத்த 12 மாதங்களுக்குள் பயன்படுத்தலாம்.

