கொரோனா கிருமி பரவலால் வருமானம் குறைந்து அவதிக்குள்ளாகும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட உதவித் திட்டத்திற்குத் தகுதி பெறாத ஓட்டுநர்களுக்கு இந்த உதவி கைகொடுக்கிறது.
அரசாங்கம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) அமைத்துள்ள புதிய நிதிக்கு ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் எனப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று தெரிவித்தார்.
'டிரைவர் கேர் ஃபண்ட்' என்று அழைக்கப்படும் இப்புதிய நிதிக்கு இப்போது முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தனியார் வாடகை வாகன சங்கம் கூறியுள்ளது.
ஓட்டுநர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டால் அவர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் தொகையாக $300 வழங்கப்படும்.
"இவ்வாண்டு பிப்ரவரி 13ஆம் தேதிக்கு முன்பு பதிவுபெற்ற தனியார் வாடகை வாகன ஓட்டுநராக நீங்கள் இருந்தால், இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த உதவித் திட்டத்தின் மூலம் நீங்கள் உதவி பெறவில்லை என்றால், டிரைவர் கேர் நிதிக்கு விண்ணப்பிப்பது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம்," என்று சங்கம் வெளியிட்ட அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
உதாரணத்திற்கு, சமூக சுகாதார உதவித் திட்டத்தின்கீழ் (சாஸ்) அவர்கள் நீல அல்லது ஆரஞ்சு நிற அட்டையை வைத்திருப்பவர்களாக இருக்கலாம். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குபவர்களாக இருக்கலாம்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த $77 மில்லியன் மதிப்பிலான உதவித் திட்டத்திற்குத் தாங்கள் தகுதி பெறவில்லை என ஓட்டுநர்கள் பலர் கருத்து கூறியதைத் தொடர்ந்து இப்புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது திட்டம், டாக்சி மற்றும் முழுநேர தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களை இலக்காக கொண்டிருந்தது.

