கொரோனா கிருமித்தொற்று காரணமாக தேர்வு ஒன்றை வீட்டிலேயே எழுத தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) அதன் மாணவர்களுக்கு அனுமதி தந்திருந்தது. தேர்வில் ஏமாற்றக்கூடாது என எச்சரிக்கப்பட்டபோதும் மாணவர்கள் சிலர் தங்களது விடைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. இவர்களது விடைத்தாட்களை பல்கலைக்கழகம் தற்போது ஆராய்ந்து வருகிறது. ஏமாற்றியவர்களை அடையாளம் கண்ட பிறகு அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாகவும் விசாரணை முடிவுகள் இன்னும் உறுதியாகவில்லை என்றும் என்யுஎஸ் கணினியியல் பள்ளியின் பேச்சாளர், த நியூ பேப்பர் நாளிதழுக்குப் பதிலளித்தபோது தெரிவித்தார்.
பாடத்தைக் கற்பித்த விரிவுரையாளர் திரு பிரபாவா ஆதி யோகா சிதி, ஏமாற்றிய மாணவர்கள் முன்வருமாறு மின்னஞ்சல் மூலம் ஊக்குவித்ததை அடுத்து ஒரு சிலர் தாங்களாவே முன்வந்து தங்களது தவற்றை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

