உணவு சேவைகள் மற்றும் வர்த்தகத் துறைகளில் உள்ள முதலாளிகள், தங்கள் ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்காக $32 மில்லியனுக்கு மேலான நிதியுதவியை நாடலாம். 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்' (எஸ்எஸ்ஜி) மூலம் 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 10,000 ஊழியர்கள் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற மாதம் அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட $4 பில்லியன் ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதி இந்த மேம்படுத்தப்பட்ட பயிற்சி ஆதரவுத் திட்டம்.
உணவுச் சேவைகள் மற்றும் வர்த்தகத் துறைகளில் உள்ள ஊழியர்கள், திறன் மேம்பாட்டில் ஈடுபவதற்கும் வர்த்தக ரீதியாக ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்கும் இந்த 'எஸ்எஸ்ஜி' திட்டம் கைகொடுக்கும் என்று கூறப்பட்டது.
ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி அடுத்த மூன்று மாதங்களுக்குத் தங்களின் ஊழியர்களைக் குறிப்பிட்ட சில பயிற்சித் திட்டங்களுக்கு அனுப்பும் முதலாளிகள் இத்திட்டம் வழி பலனடைவர்.
கொவிட்-19 கிருமித்தொற்று சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சுற்றுப்பயணம் மற்றும் ஆகாயத் துறைகளுக்கு அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் போல இவையும் உள்ளதாக வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.
ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஆதரவு வழங்க உதவுவதற்குக் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்திட அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் திரு சீ குறிப்பிட்டார்.
மூன்று மாதங்கள் முடிந்த பின்னர் இரண்டாவது உதவித் திட்டம் மூலம் இது நடக்கலாம்.
தற்போதைய கொரோனா கிருமிப்பரவல் சூழ்நிலையிலும் கிருமித்தொற்று ஒரு முடிவுக்கு வந்த சூழ்நிலையிலும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து பயனுள்ள வகையில் செயலாற்றிட திறன் மேம்பாடு முக்கியம் என்று அமைச்சர் சீ சுட்டினார்.

