வெளிநாடுகளில் நடைபெறும் பெரிய சமயக் கூட்டங்களுக்கு செல்வதைத் தவிர்த்துவிடுமாறு சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) இங்குள்ள முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா கிருமித்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முயிசின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முஃப்தி நஸிருதீன் முகம்மது நாசிர் இந்த அறிவுறுத்தலைப் பதிவிட்டார்.
பெருமளவில் ஏற்பாடு செய்யப்பட்ட சமயக் கூட்டங்களால் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட டாக்டர் நஸிருதீன், கிருமி பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் தங்களின் பங்கை ஆற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
"கிருமியை விட இறைவனுக்கே அதிகமாக அஞ்சுவதாக வெளிநாட்டு சமய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிலர் கூறித் தங்கள் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதாக கேள்விப்பட்டேன்," என்றார்.
"அறிவற்ற, பொறுப்பற்ற நடத்தைக்கு இது நேரமல்ல. இதை நான் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்," என்றார் முஃப்தி நஸிருதீன்.
கோலாலம்பூர் பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்வில் 16,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர், அதில் கலந்து கொண்ட சிங்கப்பூரர்களில் குறைந்தது ஐவர் இங்கு திரும்பிய பின், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. நிகழ்வில் கலந்துகொண்ட 101 சிங்கப்பூரர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
"நமக்கும் பிறருக்கும் ஆபத்து விளைவிக்காமல் நடந்துகொள்வதற்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்," என்று முஃப்தி குறிப்பிட்டார்.

