மலேசிய ஊழியர்கள் தங்குவதற்காக 2,000 முதலாளிகளுக்கு உதவி
கடந்த மூன்று நாட்களாக இங்கு வேலை செய்யும் மலேசிய ஊழியர்களுக்குத் தகுந்த தங்குமிடங்களைக் கண்டறிய பல அமைப்புநிலை குழு ஒன்று கிட்டத்தட்ட 2,000 முதலாளிகளுக்கு உதவி வருகிறது. மனிதவள அமைச்சின் தலைமையில் இயங்கும் இந்தக் குழு, உதவிக்கரம் நீட்டி வருகிறது. சிலர் விளையாட்டு அரங்கில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹோட்டல்கள், தங்குவிடுதிகள் போன்றவற்றில் முதலாளிகள் தங்களின் மலேசிய ஊழியர்களைத் தங்கவைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தங்க இடமில்லாமல் தவிக்கும் மலேசிய ஊழியர்களைத் தேடும் பணிகளை மனிதவள அமைச்சும் போலிசும் தீவிரப்படுத்தியுள்ளன.
மலேசிய முடக்கத்தால் உட்லண்ட்ஸ் பேருந்து நிலையம் பாதிப்பு
கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மலேசியா நேற்று முன்தினத்திலிருந்து நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நடப்புக்குக் கொண்டுவந்தது. இந்நிலையில் எப்போதும் கூட்டமும் கூச்சலுமாகக் காணப்படும் உட்லண்ட்ஸ் பேருந்து நிலையம் வெறிச்சோடிப் போனது. ஜோகூர் பாருவுக்குச் செல்லும் பேருந்து சேவை 950, மார்ச் 31ஆம் தேதிவரை இருக்காது என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. அங்கு உணவுக்கடைகள் வைத்திருப்போரின் வியாபாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக இருக்கும் கூட்டத்தில் பாதியளவே காணப்படுவதாக பேருந்து நிலையத்தின் உணவகத் துப்புரவாளர் கூறினார்.

