கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் திட்டமிட்டபடி வரும் திங்கட்கிழமை 23ஆம் தேதி பள்ளிகளும் பாலர் பள்ளிகளும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்து உள்ளது.
பள்ளி விடுமுறைக் காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய வேளையில், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில், கடுமையான நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிகள், பாலர் பள்ளிகள், மாணவர் பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஊழியர்களில் எவரேனும் இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கிய பள்ளி விடுமுறையின்போது வெளிநாடு சென்றிருந்தால் அவர்கள் நாடு திரும்பிய நாளில் இருந்து 14 நாட்கள் கட்டாய விடுப்பில் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்துடன், இரு வார காலத்திற்கு இணைப்பாட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் மாணவர்கள் தள்ளித் தள்ளி அமர வைக்கப்படுவர் என்றும் கல்வி அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ஆகியவை தெரிவித்துள்ளன.
பாலர் பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கும் அடிக்கடி உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்.
"கல்வி முறையையும் மாணவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். அப்படி கல்வி முறையை வலுவாகப் பாதுகாப்பதன் மூலம் அது தொடர்ந்து இயங்கும்; பலருக்கும் இடையூறுகள் ஏற்படாது. இல்லாவிடில், மருத்துவமனைகளிளும் இன்றியமையாத சேவைகளை வழங்கும் இடங்களிலும் பணியாற்றுவோர் உட்பட பெற்றோர்கள் பலரும் வேலைக்குச் செல்ல இயலாது," என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாகக் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் இளையர் விழாவும் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகளால் மாணவர்களும் பெற்றோர்களும் பயிற்றுநர்களும் ஏமாற்றமடைந்து இருக்கலாம் அல்லது அசௌகரியமாக உணரலாம் என்பதை திரு ஓங்கும் ஒத்துக்கொண்டார்.
இந்த ஒரு வார விடுமுறையின்போது எத்தனை மாணவர்கள் வெளிநாடு சென்றனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
ஆயினும், "ஆயிரக்கணக்கான மாணவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடு சென்று திரும்பியுள்ளனர் அல்லது திரும்பத் தொடங்கியுள்ளனர்," என்று அமைச்சர் ஓங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"கட்டாய விடுப்பு காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கும் வகையில் அவர்களின் பள்ளிகள் ஆதரவு வழங்கும். அதேபோல, வெளிநாடு சென்றிருந்த ஆசிரியர்களால் சில பள்ளிகளும் பாதிக்கப்படலாம். அந்தப் பள்ளிகளுக்குக் கல்வி அமைச்சு தன்னாலான உதவிகளை வழங்கி, கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும்," என்றும் அமைச்சர் சொன்னார்.
இதனிடையே, சிங்கப்பூரர்கள் உட்பட வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்று முன்தினம் அறிவித்தது. அத்துடன், சிங்கப்பூர்வாசிகள் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.
அதே வேளையில், மாணவர்கள், ஊழியர்கள் உட்பட அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவர் என்பதால் வரும் நாட்களில் கிருமித்தொற்று பாதிப்பும் அதிகமாக இருக்கலாம் என்று பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவரும் தேசிய வளர்ச்சி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

