கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ள அல்லது அந்தக் கிருமித்தொற்று பாதிப்பு உள்ளவர்களுடன் ஒருவர் தொடர்பில் இருந்துள்ளாரா என்பதை அறியும் வண்ணம் அவர் யார் யாருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பதை எளிதில் அறியும் புதிய விவேக கைபேசி செயலி நேற்று அறிமுகமானது.
'கொவ்டெக்' எனப்படும் அரசாங்க தொழில்நுட்ப முகவையும் சுகாதார அமைச்சும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தச் செயலி 'டிரேஸ் டுகெதர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருவர் இரண்டு மீட்டர் தூரத்திற்குள்ளும் 30 நிமிடங்களுக்கு குறையாமலும் புளுடூத் பயன்படுத்தும் கொரோனா கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உள்பட எவரையும் இந்த செயலி அடையாளம் காணக்கூடியது.
"இந்தச் செயலி குறிப்பாக கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் எவருடன் நீடித்த நேரம் தொடர்பில் இருந்திருக்கிறோம் என்று தெரியாத நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று இதை உருவாக்கியவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் செயலியை பயன்படுத்துவது கட்டாயம் இல்லை என்றபோதிலும் இதைப் பயன்படுத்த விரும்புவோர் தங்களுடைய புளுடூத் இயக்கத்தை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், அவர்கள் தங்கள் கைபேசியில் உள்ள தகவல் அனுப்பும், இருக்கும் இடத்தைத் தெரிவிக்கும் செயலியை 'ஆப்பிள் ஆப் ஸ்டோரி' லிருந்தோ 'கூகல் ஸ்டோரி'லிந்தோ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்தச் செயலியை பயன்படுத்துவோரில் எவரேனும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் சுகாதார அமைச்சு அவர் யாருடன் எல்லாம் அணுக்கத் தொடர்பில் இருந்துள்ளார் என்பதை அறிய முடியும். செயலியை நிறுத்தாமல் பயன்படுத்தலாம் என்றும் இதனால் கைபேசியின் மின்சேமிப்பு கரைந்து விடாது என்றும் செயலியை உருவாக்கிய அதிகாரிகள் கூறினர்.
இந்த செயலி மூலம் பயனாளரின் கைபேசி எண் மட்டுமே அரசாங்கத்தால் சேகரிக்கப்படும் என்றும் அவர் இருக்கும் இடம் உள்ளிட்ட மற்ற விவரங்கள் சேகரிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்ற செயலிகள் சில நாடுகளில் கிருமி பரவலுக்கு எதிராக வெற்றிகரமாகச் செயல்படு வதாகக் கூறப்படுகிறது.
உதாரணமாக தென்கொரியாவில் ஒருவரின் அருகில் கிருமித்தொற்றியோர் இருப்பதை கைபேசிச் செயலி பயனாளருக்கு எச்சரிக்கைத் தகவலை அரசாங்க அமைப்பு அனுப்பும். நோயாளியின் வயது, பாலினம், அவர் சென்று வந்த நாடுகள் ஆகிய விவரங்களும் அதில் அனுப்பிவைக்கப்படுகிறது. கிருமி பரவலைக் குறைக்க தென்கொரியாவுக்கு இந்நடைமுறை உதவி உள்ளது.
இந்த செயலியைப் பதிவிறக்க, இந்தச் செய்தியில் உள்ள படத்தை ஸ்கேன் செய்யுங்கள். இது குறித்த மேல் விவரங்களுக்கு https://www.tracetogether.gov.sg/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

