பிரதமர் லீ சியன் லூங்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனும் வரும் திங்கட்கிழமையன்று இணையம் வழி உச்சநிலை மாநாடு நடத்தவுள்ளனர். அதில் அந்த இரு தலைவர்களும் கொரோனா பேரிடர் பற்றியும் ராணுவப் பயிற்சி குறித்தும் விவாதிப்பார்கள்.
இரு நாடுகளும் நவீனமான, புத்தம்புதிய, தொழில்நுட்ப ரீதியிலான பொருளியல்களைக் கொண்டவை என்றும் இரண்டும் சேர்ந்து கொரோனாவின் பாதிப்புகளைச் சமாளிக்கும் என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் குறிப்பிட்டு உள்ளார்.
"நாங்கள் இருவரும் இந்த நேரத்தில் அரசாங்க ஒத்துழைப்புகளைத் தொடர்வதற்கு உறுதிபூண்டுள்ளோம்," என்றும் தெரிவித்தார்.
கொரோனா கிருமியை உலகம் ஒன்றுசேர்ந்துதான் ஒழிக்க முடியும். அந்தக் கிருமி உலகத்திற்கே சவாலாகிவிட்டது. கொரோனாவை ஒழிப்பதில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி பிரதமர் திரு லீயுடன் விவாதிக்க ஆவலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்-ஆஸ்திரேலியப் பிரதமர்கள், கேன்பரா நகரில் சந்திக்கவிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாகவும் ஆஸ்திரேலியாவின் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் இருவரும் இணையக் காணொளி மாநாடு நடத்துவர்.
வட்டார மீள்திறன், நிலைப்பாடு, செழிப்பு ஆகியவற்றில் பொதுவான நன்னெறிகளையும் பொதுவான நலன்களையும் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் பகிர்ந்துகொள்வதாகத் தன் அறிக்கையில் திரு மோரிசன் தெரிவித்து இருக்கிறார்.
ஒளிவுமறைவு இல்லாத, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட, செல்வச் செழிப்பான உலகச் சூழலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒத்துழைப்பையும் பணிகளையும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு, பிரதமர் லீயுடனான இணையச் சந்திப்பு மூலம் கிடைத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

