எண்ணெய் லாரி மீது கார் மோதியதை அடுத்து கார் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று முன்தினம் காலை 9.51 மணி அளவில் தெலுக் பாக்கு சாலையை நோக்கிச் சென்ற நிக்கல் டிரைவ்வில் நிகழ்ந்தது.
விபத்தில் சிக்கிய அந்த 21 வயது கார் ஓட்டுநர் ஆம்புலன்ஸ் மூலம் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் சுயநினைவின்றி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
காரும் எண்ணெய் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சியைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. எண்ணெய் லாரி சென்றுகொண்டிருந்த பாதைக்கு எதிர் திசையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென்று சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பைக் கடந்து எதிரே வந்துகொண்டிருந்த லாரிக்கு முன் சென்றது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.