பீ‌‌‌ஷான் பணிமனையில் எஸ்எம்ஆர்டி ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

பீ‌‌‌ஷான் பணிமனையில் எஸ்எம்ஆர்டி ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

1 mins read
905764c7-5675-4d7e-83c0-945508f4042d
பீ‌‌‌ஷான் பணிமனையின் ரோலிங் ஸ்டாக் பட்டறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் சிக்கி எஸ்எம்ஆர்டியின் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். கோப்புப்படம்: எஸ்எம்ஆர்டி -

போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டியின் ஊழியர் ஒருவர் இன்று (மார்ச் 23) பீ‌‌‌ஷான் பணிமனையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

எஸ்எம்ஆர்டி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நியோ கியன் ஹோங் வெளியிட்ட அறிக்கையில்,"எங்களது தொழில்நுட்ப அதிகாரி முகம்மது அஃபிக் பின் செனாவி, பீ‌‌‌ஷான் பணிமனையின் ரோலிங் ஸ்டாக் பட்டறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் சிக்கி கடுமையான காயங்களால் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது.

"நீராற்றல் அழுத்த எந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது இன்று காலை 9.20 மணியளவில் விபத்து நேர்ந்தது. உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவர்.

"துரதிர்‌ஷ்டவசமாக, சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை 11.20 மணியளவில் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், இந்த சிரமமான காலகட்டத்தில் அவர்களுக்கு ஆதரவும் உதவியும் வழங்கிவருகிறோம்," என்று குறிப்பிட்டார்.

நிலப் போக்குவரத்து ஆணையம், மனிதவள அமைச்சு, போலிஸ் விசாரணை ஆகியவற்றில் உதவி வருவதாக எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டது. விசாரணைகள் தொடரும் இவ்வேளையில், அத்தகைய பராமரிப்புப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது நிறுவனம்.

#எஸ்எம்ஆர்டி #ஊழியர் உயிரிழப்பு

குறிப்புச் சொற்கள்