தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் அடுத்த ஆறு நிலையங்கள் வரும் ஜூலை மாதத்துக்குப் பிறகு திறப்படக்கூடும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று தெரிவித்தார்.
அந்த ஆறு நிலையங்களைக் கொண்ட ரயில் பாதையில் அடுத்த மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை சோதனைப் பணிகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
பிரைட் ஹில் எம்ஆர்டி நிலையத்துக்கு நேற்று சென்று பார்வையிட்ட அமைச்சர் கோ, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ள நிலையங்கள் அடுத்த மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை வாரயிறுதிகளில் வழக்கமான இயங்கும் நேரத்தைக் காட்டிலும் சீக்கிரம் மூடப்படும் என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது வாரயிறுதிகளில் வழக்கமான நேரம் போல் இல்லாது சிறிது நேரம் கழித்து நிலையங்கள் திறக்கப்படும் என்றார் அமைச்சர் கோ.
அடுத்து திறக்கவிருக்கும் ஸ்பிரிங்லீஃப், லென்டோர், மேஃபிளாவர், பிரைட் ஹில், அப்பர் தாம்சன், கேல்டிகாட் ஆகிய ஆறு நிலையங்களைக் கொண்ட ரயில் பாதையில் சோதனைப் பணிகளை நடத்த இது வகை செய்யும் என்றார் திரு கோ.
இந்நிலையில், அடுத்த மாதம் 3ஆம் தேதியிலிருந்து ஜூலை 26 வரை ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் உள்ள உட்லண்ட்ஸ் நார்த், உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சவுத் ஆகிய நிலையங்கள் 10 மணிக்கு மூடப்படும் என்றும் சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 6.30 மணிக்குத் திறக்கும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் தெரிவித்துள்ளன.

