கொரோனா கிருமித்தொற்றைச் சமாளித்து வரும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவிக்கும்போது அவர் குரல் தழுதழுத்தது; அதற்கு மேல் தம் உரையைத் தொடர முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.
சிங்கப்பூரில் கொரோனா கிருமி பரவல் தொடர்பில் அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலை பணிக்குழுவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர்களுள் ஒருவர் திரு வோங்.
நாட்டில் ஏற்பட்டு வரும் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களைச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் மற்றவர்களும் எதிர்கொள்ள நாள்தோறும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்காக நன்றி தெரிவிக்க முயன்ற திரு வோங் பேச முடியாமல் அழுதார்.
"வார்த்தைகள் இல்லை," என்று கூறினார் திரு வோங். மேற்கொண்டு பேச முடியாமல் உரையை நிறுத்தியதுடன் கண்ணீர் சிந்தினார் அவர்.
"தயவுசெய்து எனக்கு ஒரு நிமிடம் தாருங்கள்," என்று கூறி தன்னை அமைதிப்படுத்திக்கொண்ட பின்னர் உரையைத் தொடர்ந்தார்.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் பங்களிக்கும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
"கிருமியைத் தடுத்து நிறுத்த இத்தனை சிங்கப்பூரர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி எடுக்கிறார்கள். இதைப் பாராட்ட வார்த்தைகள் போதாது.
"தங்களின் பங்கை ஆற்றி வரும் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்," என்றார் திரு வோங்.
அவர் பேசி முடித்தவுடன் நாடாளுமன்றத்தில் இருந்தோர் கைதட்டினர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடி வருகிறது சிங்கப்பூர்.
அதிலும் அண்மைய நாட்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கு ஏற்படும் கிருமித்தொற்று காரணமாக பாதிப்பு எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது.
நேற்று நண்பகல் நிலவரப்படி, 558 பேர் இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்தனர்.
கிருமித்தொற்று இன்னும் பல மாதங்களுக்குத் தொடரும் என்று எச்சரித்த திரு வோங், இது குறைந்தது ஆண்டிறுதிவரை நீடிக்கலாம் என்று தெரிவித்தார்.
"தூர இடைவெளியை அதிகரிப்பதற்காக நாங்கள் அறிவித்துள்ள நடவடிக்கைகள், பலரின் வாழ்க்கையிலும் வர்த்தகங்களிலும் சிரமத்தையும் இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை," என்றார் திரு வோங்.

