கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பும் வேண்டாம்; கிருமித்தொற்று நீடித்த காலத்திற்கும் வேண்டாம் என்பதே கொவிட்-19 தொடர்பிலான சிங்கப்பூரின் இலக்கு என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், கல்வியாளர்கள் முன்னுரைக்கும் இரு சூழல்களைப் பற்றி பேசினார்.
முதல் சூழலில் அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்காது. இத னால் மக்களில் பெரும்பாலானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவர். ஆனால் அவர்கள் குணமடைந்து கிருமிக்கு எதிராக அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியும் ஏற்படும்.
அதிகமானோருக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படும் நிலை வரும் வரை அல்லது கிருமிக்கு எதிரான தடுப்பூசி மற்றும் மருந்தைக் கண்டுபிடிக்கும் வரை தொற்று ஏற்படுவதும் மெதுவடையும்.
குறுகிய காலத்தில் பலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டால், சுகா தார பராமரிப்பு அமைப்பில் பெரும் பாதிப்பு ஏற்படும். அந்தப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்றார் அவர்.
அமைச்சர் முன்வைத்த இரண்டாவது சூழல், தொற்றின் வேகத்தைக் குறைக்க பாதுகாப்பான இடைவெளியை அதிகரித்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதாகும். இதன்படி தொற்று ஏற்பட்டாலும், தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பது நம்பிக்கை என்றார் அவர்.

