சிங்கப்பூரில் வேலை செய்ய அனுமதி அட்டை வைத்திருப்ப வர்களும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அனுமதி பெற்ற பிறகுதான் சிங்கப்பூருக்கான அவர்களின் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்தவுடன் 14 நாள் வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவு அவர்களுக்குப் பிறப்பிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
உணவை ஏற்றிக்கொண்டு வரும் லாரி ஓட்டுநர்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களை நிலம் அல்லது கடல் வழியாகக் கொண்டு வருவோருக்கு சிங்கப்பூர் நுழைவு அனுமதி தேவையில்லை. அவர்களுக்கு வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவும் பிறப்பிக்கப்படாது.
முதலாளிகள் மனிதவள அமைச்சின் இணையத்தளம் மூலம் சிங்கப்பூர் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். அமைச்சிடமிருந்து அனுமதி பெறாமல் சிங்கப்பூருக்கு வர எவ்வித பயண ஏற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என்று முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

