அறிகுறி உள்ள பயணிகளைத் திரும்ப அனுப்புவது குறித்து பேச்சுவார்த்தை

இரு நாட்டுச் சோதனைச் சாவடிகளில் கிருமித்தொற்றின் அறிகுறி தென்படும் பயணிகளை அவர்களின் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்பும் செயல்முறைகள் பற்றி சிங்கப்பூரும் மலேசியாவும் மெய்நிகர் கூட்டம் வழி நேற்று முன்தினம் விவாதித்துள்ளன.

இரண்டாவது சிங்கப்பூர்-மலேசியா கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் இரு நாடுகளும் தங்கள் தரப்பில் மேற்கொள்ளப் பட்டுள்ள கொரோனா கிருமித்தொற்று நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தன. 

அந்தப் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள இரு நாடுகளின் அதிகாரிகள் நிலம் மற்றும் கடல் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கிருமித்தொற்று அறிகுறி உள்ள பயணிகளைத் திரும்ப அனுப்புவது குறித்து பேசுகையில், 37.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமான உடல் வெப்பநிலையைக் கொண்ட பயணிகளைத் திரும்ப அனுப்புவதில் இணக்கம் கண்டனர். 

சிங்கப்பூரின் போக்குவரத்து, சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின்னும் மலேசியாவின் சுகாதார துணை அமைச்சர் நூர் அஸ்மி கசாலியும் கூட்டுப் பணிக்குழுவுக்குத் தலைமை வகிக்கின்றனர். 

இந்தப் பணிக்குழு இரு நாடுகளிலும் கொரோனா கிருமித்தொற்று நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்டது. இக்குழு அதன் அடுத்த கூட்டத்தை ஏப்ரல் மாதத்தில் நடத்தும்.