உள்ளூர் மக்களின் வேலைகளைக் காப்பதற்கும் ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கவும் சுயதொழில் புரிவோர், குறைந்த வருமான ஊழியர்கள் ஆகியோருக்கு மேலும் உதவி அதன் மூலம் குடும்பங்களைப் பாதுகாக்கவும் வேலை இல்லாதவர்களுக்கு உதவவும் வழிவகுக்கும் புதிய நடவடிக்கைகளை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நிதி அமைச்சருமான திரு ஹெங், கொவிட்-19 கிருமித்தொற்றைச் சமாளிக்க உதவும் வகையில் மேலும் $48.4 பில்லியன் துணை வரவுசெலவுத் திட்டத்தை மன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் முக்கியமாக ஐந்து நடவடிக்கைகள் இடம்பெற்று இருக்கின்றன.
சம்பள மானியம் விரிவு, நீட்டிப்பு
நிதி அமைச்சர் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்த வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்று இருந்த 'வேலை, ஆதரவுத் திட்டம்' விரிவுபடுத்தப்படும், நீட்டிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் 1.9 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உதவுவதற்காக மொத்தம் $15.1 பில்லியன் ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் இப்போது பலன் பெறுபவர்களைவிட மேலும் பலர் நன்மையடையும் வகையில் இதற்கு தகுதி பெறுவதற்கான சம்பள வரம்பு $3,600லிருந்து $4,600 ஆக உயர்கிறது.
அதாவது ஊழியர்களின் சம்பளத்தில் முதல் $4,600 தொகைக்கு 25 விழுக்காடு வரை அரசாங்கம் இணை மானியம் வழங்கும். கொரோனா கிருமி காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப இந்த உதவி கிடைக்கும். இந்த வேலை உதவித் திட்டம் முழுமையாக மேலும் இரண்டு காலாண்டுக்கு அதாவது இந்த ஆண்டு முழுவதற்கும் நீட்டிக்கப்படும். இதனால் நிறுவனங்கள் மே, ஜூலை, அக்டோபரில் சம்பள மானியத்தைப் பெறும்.
சுயதொழில் புரிவோருக்கான மாத ரொக்கம்
சுயதொழில் புரிகின்ற, தகுதி உள்ள சிங்கப்பூரர்களுக்கு ஒன்பது மாத காலம், மாதாமாதம் $1,000 ரொக்கம் கிடைக்கும். புதிய 'சுயதொழில் புரிவோருக்கான வருமான நிவாரணத் திட்டத்தின்' கீழ் இந்த உதவியை அவர்கள் பெறுவார்கள்.
இதன் மூலம் அரசுக்கு மொத்தம் $1.2 பில்லியன் செலவாகும். மேல் விவரங்களை மனிதவள அமைச்சு விரைவில் அறிவிக்கும்.
மேலும் $48 மில்லியன், இந்த ஆண்டு முடிவு வரை சுயதொழில் புரிவோருக்கான பயிற்சித் திட்டங்கள் தொடர்பில் செலவிடப்படும்.
குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கான பண உதவி அதிகரிப்பு
பிப்ரவரியில் தாக்கலான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குறைந்த வருமான ஊழியர்களுக்கான 'வொர்க்ஃபேர் சிறப்பு பணப் பட்டுவாடா திட்டம்', ரொக்கமாக $3,000 வழங்கும் திட்டமாக மேம்படுத்தப்படும்.
வேலைகளை உருவாக்குதல், முதல்முறையாக வேலை தேடுவோருக்கான பயிற்சி 'SGUnited Jobs' என்ற திட்டத்தின்படி, அடுத்த ஆண்டில் சுமார் 10,000 புதிய வேலைகள் உருவாக்கப்படும்.
பொதுத் துறையில் புதிதாக தலையெடுக்கும் துறைகளில் இடம்பெறக்கூடிய வேலைகள், அத்தியாவசிய சேவைகளில் நீண்டகாலம் பணியாற்றக்கூடிய வேலைகள், கொவிட்-19 நெருக்கடியைக் கையாளுவதற்கான குறுகியகால வேலைகள் ஆகியவை இவற்றில் உள்ளடங்கும். தனியார் துறைகள் உருவாக்கும் வேலைகளும் கிடைக்கும்.
சிங்கப்பூர் ஊழியர் அணி (Workforce Singapore) இன்று தொடங்கும் வாழ்க்கைத் தொழில் சந்தையில் உடனடியாக 2,200 வேலைகளை பெறும் வாய்ப்பு கிட்டும். முதல் முறையாக வேலை தேடுவோர், வேலை அனுபவத்தைப் பெறும் நோக்கத்தில் 'SGUnited பயிற்சி செயல்திட்டம்' என்ற ஒரு திட்டம் இடம்பெறும். இதன்மூலம் 8,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேல் விவரங்களை விரைவில் மனிதவள அமைச்சு அறிவிக்கும்.
வேலை இல்லாதோருக்கு உதவிக்கரம்
வேலை இல்லாதவர்களுக்கு சமூகச் சேவை அலுவலகங்கள் மற்றும் சமூக நிலையங்கள் மூலமாக உதவுவதற்காக திரு ஹெங் $145 மில்லியனை ஒதுக்கி இருக்கிறார்.
உடனடி உதவி தேவைப்படும் குடும்பங்களுக்காக ஏப்ரலில் தற்காலிக நிவாரண நிதி ஒன்று ஏற்படுத்தப்படும். 'காம்கேர்' விண்ணப்பங்கள் தொடர்பில் அதிக நீக்குப்போக்கு நடப்புக்கு வரும்.
இவை எல்லாம் இத்திட்டத்தில் உள்ளடங்கும். சமூகச் சேவை அலுவலகங்கள், மே மாதம் முதல் செப்டம்பர் வரை புதிய 'கொவிட்-19 மானியம்' என்ற ஒரு திட்டத்தை நிர்வகித்து நடத்தும். வேலை இழந்தவர்கள் புதிய வேலையைப் பெற முயலும்போது அல்லது பயிற்சி பெற விரும்பும்போது அவர்களுக்கு மூன்று மாத காலம் மாதம் $800 வழங்க இந்த மானியம் வகைசெய்யும்.

