துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று அறிவித்த துணை வரவுசெலவுத் திட்டத்தில், குடும்பங் களுக்குக் கூடுதல் ரொக்க வழங்குதொகை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
கொரோனா கிருமியால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலையில் தினசரி ஏற்படும் செலவுகளைக் குடும்பங்கள் சமாளிக்க இந்த வழங்குதொகை கைகொடுக்கும் என்றார் திரு ஹெங்.
இதன்படி 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திரு ஹெங் முதன்முதலில் அறிவித்திருந்த 'பராமரிப்பு மற்றும் ஆதரவுத் தொகுப்புத்திட்டம்' குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்படுகிறது.
மும்மடங்காகும் வழங்குதொகை
அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ரொக்க வழங்குதொகை மும்மடங்காகும். $300 வழங்கப்படுவதற்குப் பதிலாக ஒருவருக்கு $900 கிடைக்கும். குறைந்த சம்பள ஊழியர்களுக்குக் கூடுதலான வழங்குதொகைகள் அளிக்கப்படும்.
சிங்கப்பூர் குடியுரிமையுடன் 20 அல்லது அதற்கு கீழ் வயதுடைய குறைந்தது ஒரு பிள்ளை இருக்கும் பெற்றோருக்கு ஆளுக்கு கூடுதலாக $300 ரொக்கமாக வழங்கப்படும். இதற்கு முன்னர் $100 என்று கூறப்பட்டது.
அத்துடன் 50 வயது அல்லது அதற்கு மேல் வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு, அவர்களின் 'பேஷன்' அட்டையில் $100 நிரப்பப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த நிரப்புதல் இப்போது ரொக்கமாக வழங்கப்படும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார். இதனால் பணம் நிரப்பும் மையங்களில் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.
21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு மளிகைப் பொருட்களை வாங்குவதற்கான $300 பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும்.
இந்தக் கூடுதல் வழங்குதொகையால் முன்னர் $1,800 கிடைக்கவிருந்த மூன்று தலைமுறை குடும்பம் ஒன்றுக்கு இனி $6,700 மதிப்பிலான வழங்குதொகை கிடைத்திடும்.
அரசாங்கக் கட்டணங்கள் நிறுத்திவைப்பு
அரசாங்கம் அதன் சேவைகளுக்கு விதிக்கும் கட்டணங்களை ஓராண்டுக்கு நிறுத்திவைக்கிறது.
பல்கலைக்கழக அல்லது பலதுறை தொழிற்கல்லூரி படிப்புக்காக அரசாங்கத்திடமிருந்து கடன் பெற்றுக்கொண்ட பட்டதாரிகள், கட்ட வேண்டிய கடன் தொகையும் அதற்கான வட்டியும் ஜூன் 1 தொடங்கி அடுத்த ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும்.
அத்துடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடமானக்கடன் நிலுவைகளைத் தாமதமாகக் கட்டினால் ஏற்படக்கூடிய கட்டணங்கள் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.
சுய உதவிக் குழுக்களுக்குக் கூடுதல் ஆதரவு
சுய உதவிக் குழுக்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்படுகிறது. ஈராண்டு காலத்தில் $10 மில்லியனுக்குப் பதிலாக $20 மில்லியன் மதிப்பிலான மானியங்கள் வழங்கப்படும். $20 மில்லியன் பெறவேண்டியிருந்த சமூக மேம்பாட்டு மன்றங்களுக்கு இனி $75 மில்லியன் கொடுக்கப்படும்.
குறைந்த வருமான குடும்பங்கள், குறைந்த சம்பள ஊழியர்கள்
குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் சுய தொழில் செய்பவர்களுக்கும் $3,000 கிடைக்கும். அத்துடன் சமூகச் சேவை அலுவலகங்கள் மற்றும் சமூக மன்றங்கள் மூலம் வேலையில்லாதோருக்கு உதவ $145 மில்லியன் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.
"மக்களின் பாதுகாப்பு, நாட்டுப் பொருளியல், இதிலிருந்து மீண்டு வருவதற்கான நம் தயார்நிலை ஆகியவற்றிக்குத் தேவைப்படும் அனைத்து சமூக மற்றும் பொருளியல் நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தும்.
"திடத்துடன் இந்தச் சவால்களை ஒன்றாக சமாளிக்க சிங்கப்பூரர்கள் இப்போது தயாராக வேண்டும்," என்று மீட்சிக்கான வரவுசெலவுத் திட்ட உரையின் போது திரு ஹெங் வேண்டுகோள் விடுத்தார்.

