துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட், கொவிட்-19 கிருமித்தொற்றைச் சமாளிக்க உதவும் வகையில் மேலும் $48.4 பில்லியன் ஒதுக்கி துணை வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். உள்ளூர் ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் ஊதியத்தில் குறைந்தபட்சம் 25 விழுக்காடு அளவுக்கு அரசாங்கம் மானியம் கிடைக்க அத்திட்டம் வகை செய்கிறது.
உள்ளூர் மக்களின் வேலைகளைக் காக்கவும் அவர்கள் வேலை இழக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் எடுக்கும் துணிச்சல்மிக்க, உறுதியான நடவடிக்கைகள் மூலம் நிறுவனங்கள் உள்ளூர் ஊழியர்களின் சம்பளத்தில் 25 விழுக்காடு முதல் 75 விழுக்காடு வரை மானியம் பெறும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.
இது கடந்த பிப்ரவரியில் தாக்கலான வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்ற 'வேலை ஆதரவுத் திட்டத்தில்' ஒதுக்கப்பட்ட மானியத்தைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை ஆதரவுத் திட்டத்தை இன்னும் மேம்படுத்தும் வகையில் அந்தத் திட்டத்துக்கு இப்போது மொத்தம் $15.1 பில்லியன் ஒதுக்கப்படுகிறது என்று நேற்று நிதி அமைச்சருமான ஹெங் அறிவித்தார். ஏற்கெனவே இந்தத் திட்டத்திற்கு $1.3 பில்லியன் அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2009ல் உலகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது அரசாங்கம் அளித்த ஆதரவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் அளிக்கும் இந்த ஆதரவுடன் முதலாளிகள் ஊழியர்களை வேலையிலேயே தொடர்ந்து வைத்திருந்து உதவ வேண்டும் என்று துணைப் பிரதமர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
நிதி அமைச்சர் தாக்கல் செய்த துணை வரவுசெலவுத் திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களின் நலனுக்காக ஒதுக்கப்படுகிறது.
வேலை பார்ப்போரைப் பொறுத்தவரையில் அவர்கள் தொடர்ந்து வேலையில் நிலைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளான 1.9 மில்லியனுக்கும் மேற்பட்ட எல்லா ஊழியர்களுக்கும் 25 விழுக்காடு அடிப்படை ரொக்க மானியம் கிடைக்கும். அங்காடிக் கடைகள் உள்ளிட்ட உணவு, சேவைத் துறையில் உள்ள நிறுவனங்கள் சம்பளத்தில் 50 விழுக்காடு வரை மானியம் பெறும். கொரோனா கிருமித்தொற்று காரணமாக படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் தொழில்துறை ஊழியர்களைப் பொறுத்தவரையில், மானியத்தின் அளவு 75 விழுக்காடாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மானிய ஆதரவு, ஓர் உள்ளூர் ஊழியருக்கு முதல் $4,600 மொத்த மாத சம்பளத்திற்கு உரியதாக இருக்கும். இதுவே சிங்கப்பூரின் சராசரி சம்பளமாகும்.
மொத்த மாதச் சம்பளம் என்பது மத்திய சேம நிதிக்கு ஊழியர்கள் செலுத்தும் சந்தாவையும் உள்ளடக்கியதாகும்.
நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெறும் சம்பளத்திற்கு மானியங்கள் கிடைக்காது. முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கான சம்பள மானியத்தை மூன்று தவணைகளாக மே, ஜூலை, அக்டோபர் முடிவில் பெறலாம்.

