நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறைக்கென $750 மில்லியன் மதிப்பிலான உதவித் திட்டம் குறித்து நேற்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் விமான நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் சேவைகளைக் குறைந்தபட்ச அளவில் வழங்கி வருகின்றன. சிங்கப்பூரர்கள் நாடு திரும்புவதற்கும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இச்சேவைகள் தொடர்கின்றன.
இதற்கிடையே நேரம் வரும்போது மறுபடியும் பொருளியல் தலைதூக்க, விமானப் போக்கு வரத்துத் துறையைத் தக்கவைத்துக்கொள்வது மிக முக்கியம் என்று நிதி அமைச்சர் ஹெங் நேற்று கூறியிருந்தார்.
"நாட்டின் பொருளியலுக்கும் நம் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் குறிப்பிடத்தக்க தொடர்புகள் உள்ளன. நெருக்கடி காலத்தில் அது சிதைந்தால், நெருக்கடி முடிந்த பின்னர் துறை மீண்டு வருவது மிகச் சிரமமாக இருக்கும். இதனால் பொருளியல் மீண்டு வருவதிலும் தடை ஏற்படும்.
"ஆகாயத் துறைக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக அதிர்ச்சி, நாளடைவில் நிரந்தரமான ஒன்றாக மாறிவிடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்," என்று திரு ஹெங் எச்சரித்தார்.
விமானப் போக்குவரத்துத் துறையும் சுற்றுப்பயணத் துறையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று அறிவிக்கப்பட்ட துணை வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேம்படுத்தப்பட்ட சம்பள சலுகை திட்டம் மூலம் விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள நிறுவனங்கள் பலனடையலாம். இத்திட்டத்தின்கீழ் ஊழியர்களுக்கான சம்பளத்தில் 75 விழுக்காட்டு நிதியை அரசாங்கம் இணைந்து வழங்கும்.
விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஆதரவு வழங்க அரசாங்கம் $400 மில்லியனுக்கு மேல் செலவு செய்வதாக கூறப்பட்டது.
மேலும் $350 மில்லியன் மதிப்பிலான விமானப் போக்குவரத்துத் துறைக்கான மேம்படுத்தப்பட்ட ஆதரவுத் தொகுப்புத் திட்டமும் வழங்கப்படுகிறது. முன்னர் அறிவித்திருந்த $112 மில்லியன் தொகுப்புத்திட்டத்தை விட இது மும்மடங்குக்கு மேலானது.
"கொவிட்-19 நெருக்கடியில் தாக்குப்பிடிக்க நமது விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஆதரவு அளிப்போம்," என்று அறைகூவல் விடுத்தார் திரு ஹெங்.

