இவி போய் போ லியான் என்ற 64 வயது சிங்கப்பூர் மாது, முன் பின் தெரியாத ஓர் ஆடவருடன் 2017 நவம்பரில் இணையம் மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
அந்த ஆடவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, குறிப்பிட்ட பணத்தை தன் கணக்கில் பெற்றுக் கொள்ள இணங்கி தன் வங்கிக் கணக்கு எண்ணையும் அவரிடம் அந்த மாது கொடுத்தார்.
இவி போய்யின் கணக்கில் 2018 மார்ச் மாதம் இரண்டு பேரிடம் இருந்து $50,000 மற்றும் $48,000 போடப்பட்டது.
அந்த இருவரும் இணைய காதல் மோசடி ஒன்றுக்கு இலக்கான அப்பாவிகள். தன் கணக்கில் சேர்ந்த பணத்தை மலேசியாவில் சிலரிடம் கொண்டு ஒப்படைக்கும்படி இணைய ஆடவர் கேட்டுக் கொண்டதைப் போல இவி போய் அந்தப் பணத்தை மலேசியாவுக்கு எடுத்துச் சென்று கொடுத்தார்.
தன் கணக்கிற்கு வந்த பணம் சட்டவிரோதமானது என்பதை தெரிந்தே அந்த மாது இந்தக் காரியத்தைச் செய்து இருக்கிறார் என்று போலிஸ் தெரிவித்தது.
இந்தக் குற்றச்செயல் தொடர்பில் அந்த சிங்கப்பூர் மாது மார்ச் 20ஆம் தேதி குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டார்.
இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் முன்பின் தெரியாத யாரையும் நம்பி வங்கிக் கணக்கைக் கொடுக்க வேண்டாம் என்றும் போலிஸ் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறி இருக்கிறது.
சிங்கப்பூரில் இணையக் காதல் மோசடி விவகாரம் கடுமையான குற்றச்செயலாக உருவெடுத்து இருக்கிறது. சென்ற ஆண்டு இத்தகைய 649 மோசடி விவகாரங்களில் அப்பாவிகள் பலரும் குறைந்தபட்சம் $34.6 மில்லியன் இழந்து இருக்கிறார்கள்.
இத்தகைய மோசடி பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் அவர்கள் 1800-722-6688 என்ற எண் மூலம் தொடர்புகொள்ளலாம். அல்லது www.scamalert.sg என்ற முகவரி மூலம் இந்த மோசடி பற்றி மேலும் பல விவரங்களை அவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

