ஆர்ச்சர்ட் ரோட்டில் 1 மீட்டர் இடைவெளி விதி கடுமையாக்கப்பட்டதற்குப் பிறகு முதல் நாளான நேற்று அங்கு கூட்டம் முன்பைவிட குறைவாகக் காணப்பட்டது.
அத்தியாவசிய தேவை இருந்தாலொழிய கடைத்தொகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்துகொள்ளும்படியும் அரசாங்கம் பொதுமக்களுக்கு நினைவூட்டி வருகிறது.
சிங்கப்பூரின் மிக முக்கிய கடைத்தொகுதி வட்டாரமான ஆர்ச்சர்ட் ரோட்டில் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை நேரே காண்பதற்காக நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு அந்தப் பகுதிக்குச் சென்றது.
கொரோனா கிருமித்தொற்றுக்கு முன் இருந்ததைப் போல பாதி அளவுக்குக்கூட இப்போது கூட்டம் இல்லை என்று கடைக்காரர்கள் பலரும் தெரிவித்ததாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது.
பல கடைத்தொகுதிகளும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அமல்படுத்தி இருக்கின்றன. பல நுழைவாயில்களை அடைத்துவிட்டன.
எந்தவொரு நேரத்திலும் கடைகளுக்குள் வரும் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கையை அவை குறைத்து இருக்கின்றன.
ஐயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் உள்ள கடைகள் காலியாகவே இருந்தன. ஒன்று அல்லது இரண்டு வாடிக்கையாளர்கள் மட்டும் வந்திருந்தார்கள்.
எத்தனை பயனீட்டாளர்கள் உள்ளே வருகிறார்கள் என்பதைக் கணக்கிடுவதற்காக கையில் கணக்கீட்டுச் சாதனத்துடன் நுழைவு வாயில்களில் ஊழியர்கள் பணியில் இருந்தார்கள்.
என்றாலும் மூஜி, லுலுலெமன் போன்ற பிரபலமான கடைகளில் வாடிக்கையாளர்கள் வரிசைப் பிடித்து நின்றனர். இருந்தாலும் 1 மீ. இடைவெளி நியதியை அவர்கள் கடைப்பிடித்தார்கள்.
டேங்ஸ் கடைத்தொகுதியில் பல பகுதிகளிலும் 1 மீ. இடை வெளியை நினைவூட்டும் அடையாளங்கள் காணப்பட்டன.
கடைத்தொகுதிகளும் கவர்ச்சி இடங்களும் இதர பொது இடங்களும் 10 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக்கூடாது. அதிகம் பேர் கூடுவதை அனுமதித்து கொரோனா கிருமித்தொற்றுக்கு வழிவகுத்துவிட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாங்கள் தவறாமல் எடுத்து வருவதாகவும் வீட்டிற்கு வெளியே செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்வதாகவும் வாடிக்கையாளர்கள் பலரும் தெரிவித்தனர்.
1 மீ. இடைவெளி உள்ளிட்ட பல பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் நடைமுறைப்படுத்துவதற்கு உதவியாக அரசாங்க அமைப்புகள் முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளன.

