சுகாதாரப் பிரச்சினையைவிட அடுத்த பொதுத் தேர்தலை தாமதப்படுத்துவதால் ஏற்படக்கூடிய அரசமைப்புச் சட்டப் பிரச்சினை பரவாயில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தலைமைச் செயலாளர் டான் செங் போக் (படம்) நேற்று தெரிவித்தார்.
பொதுத் தேர்தலை 2021 ஏப்ரல் மாதத்திற்குள் நடத்த முடியவில்லை என்றால் அதிபர் காபந்து அரசை அமைக்க வேண்டும் என்று டாக்டர் டான் ஏற்கெனவே யோசனை தெரிவித்து இருக்கிறார். அந்த யோசனையை நேற்று அவர் தற்காத்துப் பேசினார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்ற ஒரு காணொளித் தகவல் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
டாக்டர் டான், முன்பு மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றி இருக்கிறார். அதிபர் தேர்தலிலும் அவர் போட்டியிட்டு இருக்கிறார்.
தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் 2.6 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகி அதனால் சுகாதார நெருக்கடி ஏற்படக்கூடிய ஆபத்து தலைதூக்கும் என்பதே தான் முன்வைத்து உள்ள யோசனையின் முக்கிய அம்சம் என்று அந்தக் காணொளிச் செய்தி குறிப்பிட்டது.
"அடுத்த 12 மாதங்களில் உங்களுடைய பணியைத் திறம்பட ஆற்றி ஒவ்வொருவரையும் பாதுகாத்து வாருங்கள். இதுவே அரசாங்கத்துக்கு தெள்ளத்தெளிவாக நான் விடுக்கும் செய்தி," என்று டாக்டர் டான் குறிப்பிட்டு இருக்கிறார்.
தேர்தலை நடத்த வேண்டிய காலகட்டத்திற்குள் கொரோனா கிருமி ஒடுங்கிவிடவில்லை என்றால் அதிபர் காபந்து அரசு ஏற்பட வழிவகுக்க வேண்டும் என்று டாக்டர் டான் விடுத்திருக்கும் யோசனை தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து என்ன என்பது பற்றி சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திரு டியோ, இதன் தொடர்பில் தான் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துடன் ஆலோசித்ததாகவும் தேர்தலை உரிய காலத்திற்குள் நடத்தாமல் தாமதப்படுத்துவது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த டாக்டர் டான், பொதுத் தேர்தலைத் தாமதப்படுத்துவது அரசமைப்புச் சட்டப் பிரச்சினையை உருவாக்கும் என்றாலும் அந்தப் பிரச்சினை கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தின்போது தேர்தலை நடத்துவதைவிட சிறந்ததாகவே இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, வெள்ளிக்கிழமையன்று ஒரு பேட்டியில் தேர்தலைப் பற்றி கருத்து கூறிய பிரதமர் லீ சியன் லூங், எப்போது பொதுத் தேர்தலை நடத்துவது என்பதன் தொடர்பில் இதுவரை தான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

