கொரோனா கிருமி தொற்றுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையின்றி கடைத்தொகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக இணையம் வழியாக உணவு, மளிகைப் பொருட்களை வாங்க மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிப்பதில் டாக்சி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்கள் கைகொடுக்கலாம் என்று போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் கூறியுள்ளார்.
உணவு விநியோகிப்பதில் தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்பதற்காக இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
"ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி, வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளால் உணவு அல்லது மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் சேவைகளுக்கு தேவை அதிகரிக்கலாம்," என்று கூறிய அமைச்சர், அந்தத் தேவையை இணையம் வழியாக விநியோகிக்கும் நிறுவனங்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம் என்றார்.
பொதுமக்கள் வீட்டில் தங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுவதால் வரப்போகும் வாரங்களில் வீட்டுச்சேவைக்கு மேலும் தேவை அதிகரிக்கலாம் என்று அவர் கூறினார்.
பயணிகளுக்கான சேவையும் சாலைகளில் போக்குவரத்தும் குறைந்துள்ளதால் வழக்கத்திற்கு மாறான சூழ்நிலை நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் உணவு விநியோகிப்பை டாக்சிகளுக்கும் வாடகைக் கார் ஒட்டுநர்களுக்கும் விரிவு படுத்த முடிவு செய்துள்ளோம் என்று அமைச்சர் சொன்னார்.
"இதில் அவர்களுக்கு விருப்பமிருந்தால் கூடுதல் வருமானத்தையும் ஈட்ட உதவியாக இருக்கும். இதற்காக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மட்டும் செல்ல வேண்டும் என்கிற விதிமுறை உடனடியாக தளர்த்தப்பட்டு ஜூன் இறுதி வரை நடைமுறையில் இருக்கும்," என்று அமைச்சர் கோ பூன் வான் மேலும் தெரிவித்தார்.

