பிடோக் மாலில் உள்ள ஃபேர் பிரைஸ் ஃபைனஸ்ட் பேரங்காடியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பேரங்காடி மூடப்பட்டுள்ளது.
முழுமையான சுத்திகரிப்புப் பணிகளுக்காக பேரங்காடி மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் இம்மாதம் 4ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்றும் ஃபேர் பிரைஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. கடையில் பொருட்களை அடுக்கும் பணியில் அந்தப் பெண் ஈடுபட்டிருந்தார் என்றும் வாடிக்கையாளர்களுடனான அவரது தொடர்பு மிகக் குறைவு என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அந்த ஊழியர் மருத்துவப் பணியாளார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அத்துடன் அந்தப் பேரங்காடியில் பணிபுரியும் அனைவரும் கட்டாய விடுப்பில் சென்றுள்ளனர்.
மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு அந்த ஊழியர் பணிக்குச் செல்லவில்லை. 26ஆம் தேதி விடுப்பில் இருந்த அவர், மறுநாள் காய்ச்சலுக்காக மருத்துவரை அணுகினார். அவர் தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட ஊழியருக்கு உதவி வருவதாகத் தெரிவித்த ஃபேர்பிரைஸ், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பதில் அதிகாரிகளுக்கு உதவி வருவதாகவும் குறிப்பிட்டது.
கொவிட்-19 பரவல் தொடங்கியதிலிருந்தே சுத்திகரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அடிக்கடி தொடக்கூடிய கம்பிகள், டிராலிகள், பெட்டிகள், காசாளர் நிலையங்கள் போன்றவை நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தப்படுத்தப்படுகிறது. பேரங்காடியின் ஊழியர்கள், பொருட்களை விநியோகிப்போர் ஆகியோரின் உடல் வெப்பநிலை தினமும் இருமுறை பதிவு செய்யப்படுகிறது என்று ஃபேர் பிரைஸ் தெரிவித்தது.

