எங் நியோ அவென்யுவில் கார்களுக்கு அருகே வெள்ளைக் குதிரை வீதிகளில் வலம் வந்த அரிய காட்சியைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த வெண்புரவியைக் காட்டும் 15 விநாடி நீள காணொளி நேற்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்தக் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்ட மூன்று மணி நேரங்களில் கிட்டத்தட்ட 7,000 முறைக்கு மேல் பகிரப்பட்டது.
டர்ப் கிளப் ரோட்டிலுள்ள பைசானோ போலோ பள்ளியைச் சேர்ந்த 'கொக்கோரித்தா' என்ற பெயருள்ள அந்தக் குதிரை, 20 நிமிடங்களுக்குள் நேற்று பிற்பகல் நான்கு மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டதாக அப்பள்ளியின் உரிமையாளர் ரொன்னி லிம் தெரிவித்தார்.
"குதிரைகள் எப்படியேனும் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்புவது வழக்கம். இந்தக் குதிரை நலமாக இருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்கிறோம்," என்று திரு லிம் கூறினார்.

