வீட்டில் இருக்க தயாராகும் குடும்பங்கள்

வீட்டில் இருக்க தயாராகும் குடும்பங்கள்

3 mins read
5d932319-d01d-4588-901b-c09a5af33e87
ஜூரோங் வட்டாரத்தின் ஜெம் கடைத்தொகுதியின் என்டியுசி பேரங்காடியில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

கடந்த வாரம் பிரதமர் லீ கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தை அறிவித்தபோது, பெரும்பாலான வேலையிடங்கள் சுமார் 1 மாத காலத்திற்கு மூடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் உணவுக்கூடங்கள், சந்தைகள், பேரங்காடிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், பொதுப்பயனீட்டு நிறுவனங்கள்,போக்குவரத்து மற்றும் வங்கிச் சேவைகள் போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கும் பொருளியல் துறைசார் வேலையிடங்களுக்கும் இதனிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் நடப்புக்கு வருவதற்கு முன், கடந்த நாட்களில் பொது மக்கள் எப்படி தங்களை தயார்ப்படுத்திக்கொண்டனர் என்பதை அறிய தமிழ் முரசு முட்பட்டது.

பெரும்பலானோர் அத்தியாவசிய மளிகைப் பொருட்களுக்காக கடைசி நேர வரிசையில் நிற்கப்போவதில்லை என்றனர். அத்தியாவசியப் பொருட்களுக்குப் பஞ்சம் இருக்காது என்று அரசு உறுதியளித்திருப்பதை அவர்கள் சுட்டினர். மாறாக பிள்ளைகளுக்குத் தேவையான புத்தகங்கள் போன்றவற்றை சிலர் முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டனர்.

கடந்த சனிக்கிழமை, நார்த் பாயிண்ட் கடைத்தொகுதியில் 'பிரின்டர் இங்' வாங்க சென்றிருந்தார் கலைத் துறையில் பணியாற்றும் 39 வயது பா.மரியம். தற்போது வீட்டிலிருந்து வேலை செய்வதால் இவருக்கு பிரின்டரின் பயன்பாடு தேவையானது. அதுவும், திட்டம் நடப்பில் வந்ததும் பிரின்டர் விற்கும் கடை திறந்திருக்குமா என்பது அக்கடையில் பணியாற்றுபவருக்கும் அப்போது தெரியவில்லை என்று குமாரி மரியம் கூறியிருந்தார்.

அழகு நிலையங்கள் ஒரு மாதத்திற்கு மூடப்படும் என்பதை அவர் அறிந்து தம் வீட்டின் அருகில் இருக்கும் அழகு நிலையத்தில் 'டிரெடிங்' சேவைக்காக கடந்த ஞாயிறு அன்று சென்றிருந்தார். தொடர்பியல் நிர்வாகியாக பணியாற்றும் திரு நூர் அமின் ‌‌‌ஷாவும் ஆசிரியர் பணியில் இருக்கும் அவரது மனைவியும் வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர்.

வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் எல்லாம் வாங்கிவிட்டனர் ஆனால் அடுத்த ஒரு மாதத்திற்குக் குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாத மகனை வீட்டிலிருந்து அவர்கள் பராமரிக்க வேண்டும். அதற்கு தயாராக, இவர்கள் வார இறுதி நாட்களில், 'பாப்புயுலர்' புத்தகக் கடையில் ஒரு மாதத்திற்கு தேவையான கிட்டத்தட்ட 30 சிறார் நடவடிக்கை புத்தகங்களையும் சில விளையாட்டுப் பொருட்களையும் வாங்கினர்.

சொத்து முகவரான திருமதி ரா.சந்திரிக்காவும் ராப்பிள்ஸ் பெண்கள் பள்ளியில் பயிலும் தமது 10 வயது மகளுக்கு பள்ளிப் பாடங்களுக்கு தேவையானப் பொருட்களை வாங்க கடந்த ஞாயிறு அன்று 'பாப்புயுலர்' கடைக்குச் சென்றிருந்தார்.

பள்ளிப் பாடங்களுக்கு உதவும் பேனா, ஃப்ல்ஸ்கேப் காகிதம் போன்றவற்றை போதுமான அளவுக்கு வாங்கிவிட்டதால் அப்படி கடைகள் மூடியிருந்தாலும் அதனை தேடிச் செல்ல அவசியம் இருக்காது என திருமதி சந்திரிக்கா சொன்னார். தற்போது தமது சமையல் அறையில் புதுப்பிப்பு பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் புதிய சமையல் 'இன்டக்‌‌ஷன்' பாத்திரங்கள் தேவைப்படுவதாகவும் தொடர்பியல் துறை இயக்குநர் திருவாட்டி ஜெ.லீலா தெரிவித்தார்.

இணையத்தில் அவற்றை வாங்கலாம் என்று அவர் ஆரம்பத்தில் எண்ணினார் ஆனால் பொருட்கள் வீட்டிற்கு வருவதற்கு சிறிது காலம் எடுக்கும். கடைத்தொகுதிக்கு சென்றால் அங்கு கூட்டமாக இருக்கும் என்றும் தற்போதைய கொவிட்-19 நிலவரத்தை கருதி, வீட்டில் இருப்பதுதான் உகந்தது என்றும் அவர் சொன்னார்.

"இத்தருணத்தில் அவசரமாகச் சமைப்பதற்கு புதிய பாத்திரங்களை வாங்கப்போவதில்லை. 'திங்காட்' உணவு விநியோகச் சேவையை தற்காலிகமாக பயன்படுத்திவிட்டு பிறகு நிலைமை மேம்படும்போது அவற்றை கடையில் வாங்கிக் கொள்வேன்," என்றார் திருவாட்டி லீலா, 54.