சுயதொழில் புரிவோருக்கான வருமான நிவாரணத் திட்டத்தில் மாற்றம்

சுயதொழில் புரிவோருக்கான வருமான நிவாரணத் திட்டத்தில் மாற்றம்

2 mins read
84f8f9e5-c0d9-4256-9b80-c52bdfbc6839
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சுயதொழில் புரிவோரது வருமான நிவாரணத் திட்டத்திற்கு (செர்ஸ்) இனி கூடுதலானோர் தகுதிபெறுவர். கொவிட்-19 தொடர்பில் நேற்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் அறிவித்த ஒற்றுமைக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இதற்கான விவரங்கள் இடம்பெற்றன. இதன்படி சுயதொழில் செய்வோர் வேறு வேலை மூலம் சிறிதளவு வருமானம் பெற்றாலோ அவர்களின் சொத்துகளின் ஆண்டு மதிப்பிற்கான உச்ச வரம்பு $21,000 வரை இருந்தாலோ மேம்படுத்தப்பட்ட 'செர்ஸ்' திட்டத்தின் மூலம் அவர்கள் உதவி பெறலாம்.

இதனால் மேம்படுத்தப்பட்ட 'செர்ஸ்' திட்டம் வழி 88,000 பேருக்குப் பதிலாக கிட்டத்தட்ட 100,000 பேர் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் அறிவிக்கப்பட்ட 'செர்ஸ்' திட்டப்படி, தகுதிபெறுவோருக்கு ஒன்பது மாதக் காலத்தில் $9,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தகுதிபெறுவதற்கான அளவுகோல்கள் மிகக் கடுமையாக இருந்ததெனச் சிலர் கூறினர்.

சுயதொழில் செய்வோரது சொத்துகளின் ஆண்டு மதிப்பிற்கான உச்ச வரம்பு $13,000க்கு மேல் இருந்தாலோ வேறு வழிகளில் வருமானம் ஈட்டினாலோ திட்டத்திற்குத் தகுதிபெற முடியாது என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் மேம்படுத்தப்பட்ட 'செர்ஸ்' திட்டத்தின் மூலம் இனி கூடுதலானோர் தகுதிபெறுவர். இவர்களுக்கு இவ்வாண்டு மே, ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் தலா $3,000 வழங்கப்படும்.

சுயதொழில் புரிவோர் பலதரப்பட்ட துறைகளில் வெவ்வேறு வேலை நேரங்களுடனும் வேலை ஏற்பாடுகளும் பணிபுரிகின்றனர். கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் இந்த ஒரு மாதத்திற்கு நடப்பில் இருக்க, சுயதொழில் செய்யும் பலர் கூடுதல் வருமானத்தை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டார் திரு ஹெங்.