அமைச்சர் சான்: ஒருமாதக் காலத்திற்கும் மேல் போகலாம்

கொவிட் கிருமிப்பரவல் அடுத்த மாதத்திற்குள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் நடப்புக்குவரும் நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் மே 4ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படும் என்று வர்த்தகத் தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் எச்சரித்துள்ளார். 

நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் திட்டங்களின் வெற்றி, சிங்கப்பூரர்களைப் பெரிதும் நம்பி இருப்பதாக திரு சான் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூறினார். 

“நாம் அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்து நோய்ப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கடுமையாகக் கருதினால் இந்தக் கிருமிப்பரவலை நம்மால் அடுத்த ஒரு மாதத்திற்குள் கட்டுக்குள் கொண்டுவர முடியும். பின்னர் படிப்படியாக நாம் வழக்கநிலைக்குத் திரும்பி அதிரடி திட்டத்தால் ஏற்படும் தாக்கத்தை மட்டுப்படுத்தலாம்,” என்று திரு சான் கூறினார்.

“ஆனால் இந்த நடவடிக்கைளை நாம் கடுமையாகக் கருதாவிடில், சூழ்நிலையை நம்மால் கட்டுப்படுத்தமுடியாமல் போகலாம். அதனால் இந்தக் காலக்கட்டத்தைத் தேவைப்படும்வரை மேலும் நீட்டிப்பதற்கான அவசியம் வரலாம். இதனால் நம் பொருளியல் மேலும் பாதிப்படையலாம்,” என்று திரு சான் எச்சரித்தார்.
“எனவே நாம் ஒன்றிணைந்து செயல்படுவதே நம் ஒட்டுமொத்த நலனுக்கும் நல்லது. இதனை நாம் ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்,”  என்றார் திரு சான்.

தெம்பனீஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி செங் லீ ஹுவியின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது பேசிய திரு சான், சிங்கப்பூருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இருப்பதாக உறுதி அளித்தார். வர்த்தக வரத்து தங்குதடையின்றி செயல்பட சிங்கப்பூர், ஒருமித்த மனப்பான்மையைக் கொண்ட பங்காளிகளுடன் பணியாற்றுகிறது என்றும் திரு சான் கூறினார்.