கடந்த வாரம் பிரதமர் லீ கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தை அறிவித்தபோது, பெரும்பாலான வேலையிடங்கள் சுமார் ஒரு மாத காலத்திற்கு மூடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், உணவகங்கள், சந்தைகள், பேரங்காடிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கும் பொருளியல் துைறகளுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெரும்பாலானோர் அத்தியாவசிய மளிகைப் பொருட்களுக்காக நீண்ட வரிசைகளில் நிற்கப்போவதில்லை என்றனர். அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இருக்காது என்று அரசு உறுதி அளித்திருப்பதை அவர்கள் சுட்டினர். மாறாக பிள்ளைகளுக்குத் தேவையான புத்தகங்கள், போன்றவற்றை சிலர் முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டனர்.
தொடர்பியல் நிர்வாகியாக பணியாற்றும் திரு நூர் அமின் ஷாவும் ஆசிரியர் பணியில் இருக்கும் அவரது மனைவியும் வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் எல்லாம் வாங்கி விட்டனர். ஆனால் அடுத்த ஒரு மாதத்திற்கு குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாத மகனை அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு தயாராக, ஒரு மாதத்திற்கு தேவையான கிட்டத்தட்ட 30 சிறார் நடவடிக்கை புத்தகங்களையும் சில விளையாட்டுப் பொருட்களையும் வாங்கினர்.
சொத்து முகவரான திருமதி ரா.சந்திரிக்காவும் ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் பயிலும் தமது மகளுக்கு பள்ளிப் பாடங்களுக்கு பேனா, ஃபுல்ஸ்கேப் தாட்கள் போன்றவற்றை போதுமான அளவுக்கு வாங்கிவிட்டதாகக் கூறினார்.

