நகரை நோக்கிச் செல்லும் எம்ஆர்டி ரயில்களில் நேற்று இருக்கைகள் காலியாக இருந்தன. வழக்கமாக பரபரப்பாக காணப்படும் ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்புக்கு வந்த முதல் நாளான நேற்று நிலவரத்தைக் கண்டறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு தீவின் பல இடங்களுக்குச் சென்றது.
அலுவலக ஊழியர்கள் பணிபுரியும் மத்திய வர்த்தக வட்டாரம் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
தீவு முழுவதும் பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் நேற்று காலை பிள்ளைகளைப் பெற்றோர் வாகனங்களிலிருந்து இறக்கிவிட்டதைத் தொடர்ந்து, சாலையில் வாகனப் போக்குவரத்து குறைந்தது.
இன்று முதல் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும் முறை நடப்புக்கு வருவதைத் தொடர்ந்து, சாலைகளில் வாகனப் போக்குவரத்து மேலும் குறையக்கூடும்.
வீடமைப்புப் பேட்டைகளுக்கு அருகே ஈரச் சந்தைகள், உணவங்காடி நிலையங்கள், இதர உணவ கங்கள் அனைத்தும் திறந்திருந்தன.
ஆனால், வாடிக்கையாளர்கள் உணவுக் கடைகளில் உணவருந்த முடியாது. உணவைப் பொட்டலங்களில் கட்டி வெளியே எடுத்துச் செல்ல மட்டும் முடியும்.
இந்தக் காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் சில வேலையிடங்கள் பட்டியலில் வங்கிகளும் அடங்கும்.
அவை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டாலும், வங்கிக் கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை வங்கிகள் குறைத்துள்ளன.
உணவங்காடிக் கடைகளில் கிண்ணங்கள், கரண்டிகளைக் கடைக்காரர்கள் எடுத்து வைத்துவிட்டனர். உணவை வெளியில் எடுத்துச் செல்வதற்கான பாக்கெட்டுகள் மட்டும் இருந்தன. உணவங்காடி நிலையங்களில் வாடிக்கையாளர்கள் உணவருந்தினால் அவர்களுக்கும் உணவை விற்ற சம்பந்தப்பட்ட கடைக்காரருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்பதைத் தாங்கள் உணர்ந்திருப்பதாக கடைக்காரர்கள் பலர் கூறினர்.
பிடோக் பேருந்து சந்திப்பு உணவங்காடி நிலையத்தில் தேசிய சுற்றுப்புற வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் நேற்று காணப்பட்டனர். வரிசையில் நிற்பவர்களுக்கு இடையே பாதுகாப்பான தூர இடைவெளி இருப்பதை உறுதிசெய்யுமாறும் உணவங்காடி நிலையத்தில் உணவருந்த வேண்டாம் என்றும் அதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
சந்தையில் பண்புரிபவர்களும் உணவங்காடி நிலையங்களில் கடைகள் வைத்திருப்பவர்களும் அமர்ந்து உணவருந்துவதற்கு இடம் கிடைப்பது சவாலாக இருப்பதாக சிலர் தெரிவித்தனர்.
"தங்களது சொந்த கடைகளுக்கு முன்னால் அமர்ந்து உணவருந்தியதற்காக கடைக்காரர்கள் சிலர் விமர்சனத்திற்கு ஆளாகினர். அவர்களும் உணவு உண்ண வேண்டும். வேறெங்கு சென்று அவர்கள் உணவு அருந்துவர்?" என்று கிம் மோ சந்தையில் இறைச்சிக் கடை நடத்தும் திரு பில்லி இயோ கேள்வி எழுப்பினார்.
புதிய கட்டுப்பாடுகளுக்கு மக்கள் உட்பட்டு நடக்கின்றனரா என்பதைப் பார்வையிட, பல்வேறு அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த 2,600 அதிகாரிகள் தீவு முழுவதும் உள்ள பல இடங்களுக்குச் சென்றனர்.
கடைத்தொகுதிகளில் உள்ள பேரங்காடிகள், உணவகங்களைத் தவிர்த்து, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால் தீவு முழுவதும் உள்ள கடைத்தொகுதிகள் அமைதியாகக் காணப்பட்டன.

