சிங்கப்பூரில் கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நேற்று முதல் மே 4ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் மோட்டார் வாகனப் பழுதுபார்ப்புப் பட்டறைகள் திறந்திருக்க வேண்டுமெனில் அதற்கான அனுமதியை அவை பெற வேண்டும். அவை அவசரகால வாகனப் பழுதுபார்ப்புப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் காலகட்டத்தில் வழக்கமான வாகனப் பழுதுபார்ப்புப் பணிகளையோ வாகனத் தோற்றத்தை மெருகூட்டும் பணிகளையோ மேற்கொள்ளக்கூடாது என்று வர்த்தக, தொழில் அமைச்சு கூறியது.
"உதாரணத்திற்கு, சாலையில் பழுதடைந்த அல்லது விபத்துக்குள்ளான வாகனங்களை மோட்டார் வாகனப் பழுதுபார்ப்புப் பட்டறைகளுக்கு இழுத்துச் சென்று அவற்றை அங்கு பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்," என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் விவரித்தார்.

