குடியிருப்புப் பகுதிகளில் இணைய சேவைகளை மேம்படுத்துவதற்காக தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது.
மேலும், இந்த கட்டுப்பாட்டுக் காலத்தில் அதிகமான ஒளிவழிகளை மக்கள் இலவசமாக பார்க்க வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் வீட்டிலிருந்து வேலை செய் யவும் படிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ள கொரோனா பரவலை முறியடிக்கும் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து இது இடம்பெறுவதாக தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) தெரிவித்துள்ளது.
தனிநபர்கள், வீடுகள், வணிகங்கள் வீட்டிலிருந்தபடி அத்தியாவசிய சேவைகள், இணைய நடவடிக்கைகளின் சீரான செயல்பாட்டை தொடர்ந்து அனுபவிப்பதை உறுதி செய்யும் வகையில் நாடு தழுவிய இணைய திறனை அதிகரிக்க உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று ஆணையம் கூறியது.
தற்போது வீடுகளில் இணையப் பயன்பாடு அதிகரித்து இருப்பதால், இணைய கட்டமைப்பு மேம்பாடுகள் குடியிருப்பு பகுதிகளில் தடையற்ற இணைய சேவை வழங்கலை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகமான ஒளிவழிகள் பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்வதற்காக, அவர்கள் தற்போதுள்ள சேவைகளுக்கு சந்தாதாரர்களாக இல்லாவிட்டாலும்கூட, மீடியாக்கார்ப் மற்றும் கட்டணத் தொலைக்காட்சி நடத்துநர்களான சிங்டெல், ஸ்டார்ஹப் ஆகியோருடன் இணைந்து ஆணையம் பணியாற்றியுள்ளது.
எடுத்துக்காட்டாக, மீடியா கார்ப் அதன் இலவச வசந்தம், சூர்யா ஒளிபரப்பு நேரத்தை உடனடியாக நீட்டிக்கும். வழக்கமாக மாலை 3 மணிக்கு ஒளிபரப்பைத் தொடங்கும் இவை இரண்டும் இந்த கட்டுப்பாடு காலத்தில் காலை 9 மணிக்கு ஒளிபரப்பைத் தொடங்கும்.
சிங்டெல் இன்று முதல் இலவச முன்னோட்ட ஒளிவழிகளின் எண்ணிக்கையை 30 ஆக உயர்த்தும். சந்தாதாரர்கள் அல்லாதவர்கள் இந்த ஒளிவழிகளை நிறுவனத்தின் 'காஸ்ட் ஸ்ட்ரீமிங்' சேவை வழியாக அணுகலாம்.
ஸ்டார்ஹப் சந்தாதாரர்கள் 32 இலவச ஒளிவழிகளைக் காணலாம்.
மானிய விலையில் கணினி, கண்ணாடியிழை அகன்ற அலைவரிசை (ஃபைபர் பிராட்பேண்ட்) சேவை தேவைப்படும் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 'NEU பிசி பிளஸ்' திட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், எடுத்துக்காட்டாக, மானியத்துடன் கூடிய இரண்டாவது கணினியைத் தேர்வுசெய்யலாம்.
அனைத்து சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர்வாசிகளும் தொடர்புடனும், உற்பத்தித்திறனுடன் பொழுதுபோக்கு வசதியுடன் இருக்க அரசாங்கம் உதவுகிறது என்று தகவல் தொடர்பு அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறினார்.
மின்னிலக்க இணைப்பு, உள்ளடக்கம், சேவையைப் பெறுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான இந்த முயற்சிகள் அனைத்து சிங்கப்பூர்வாசிகளும் வீட்டிலேயே இருந்து, கிருமி பரவலை முறியடிக் கும் நடவடிக்கைகளுக்கு இணங்கி செயல்படுவதற்கான தேசிய முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.

