இந்தியாவிலிருந்து மொத்தம் 699 சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் சிங்கப்பூருக்குப் பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். இவர்கள் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமை ஆகிய தினங்களன்று இங்கு திரும்பியுள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பலர் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து புதுடெல்லி, மும்பை மற்றும் சென்னை விமான நிலையங்களுக்குச் செல்லவேண்டியிருந்தது. இவர்களுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விமானங்கள் வழி சிங்கப்பூர் வந்து சேர்ந்தனர்.
"புதுடெல்லியிலுள்ள சிங்கப்பூர் தூதரகம், மும்பையின் சிங்கப்பூர் துணைத் தூதரகம், சென்னையின் சிங்கப்பூர் துணைத் தூதரகம் ஆகியவை இந்தியாவில் இந்த வெளியேற்ற நடவடிக்கையை இணைந்து நடத்தின," என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூர்வாசிகள் பாதுகாப்பாகத் திரும்பியதற்கு வசதி ஏற்படுத்திய இந்திய அரசாங்கத்திற்கு வெளியுறவு அமைச்சு நன்றி தெரிவித்துக்கொண்டது. நாடு திரும்பியுள்ள பயணிகளுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 14 நாட்களுக்குக் குறிப்பிட்ட சில இடங்களில் தனிமைப்படுத்தப்படுவர் என்றது அந்த அறிக்கை.

