பிரதமர் லீ: தயவுசெய்து வீட்டில் இருங்கள்

பிரதமர் லீ: தயவுசெய்து வீட்டில் இருங்கள்

3 mins read
ff2372cd-4fa5-42fa-ad48-33c274cba5bb
-

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக இங்கு ஒரு மாத காலமாக நடப்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலருக்கும் இடையூறாக உள்ளது. அத்துடன் நாட்டுப் பொருளியலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடுமையான கட்டுப்பாடுகளை சிங்கப்பூரர்கள் கடைப்பிடிப்பதன் மூலம் பலன் சீக்கிரம் தெரியத் தொடங்கும் என்றும் அதன் பின்னர் நடப்பில் உள்ள நடவடிக்கைகள் மெல்லக் குறைக்கப்படும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் நேற்று கூறினார்.

தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளில் திரு லீ இவ்வாறு பேசியிருந்தார். அனைவரும் தங்களின் பங்கை ஆற்றவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அடுத்த சில வாரங்கள் கடுமையாக இருக்கும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார் பிரதமர் லீ. கொரோனா கிருமித்தொற்று சூழ்நிலை குறித்த அண்மைய தகவல்களைத் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

"நம்மில் சிலர் இந்த ஒரு மாத காலத்தில் நடப்பில் இருக்கும் நடவடிக்கைகளை ஒழுங்காக கடைப்பிடிக்காவிட்டால், இந்த முயற்சிகள் யாவும் வீணாகிவிடும். நாம் அனுபவித்த சிரமம், வலி, தியாகம் அனைத்துக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும்," என்றார் திரு லீ. நேற்று முன்தினம் புதிய உச்சமான 287 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. இவற்றில் 70 விழுக்காடு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும்விடுதிகள் தொடர்பானவை.

இந்த இடங்களில் கிருமித்தொற்று குழுமங்கள் அதிகம் ஏற்பட்டு வருவது தொடர்பிலும் திரு லீ பேசியிருந்தார். வெளிநாட்டு ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருவதாக குறிப்பிட்ட திரு லீ, சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு முக்கியமானதெனத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன் வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பங்களிடமும் தனிப்பட்ட முறையில் பேசியிருந்தார் பிரதமர். "வெளிநாட்டு ஊழியர்களின் நலனை உறுதி செய்வது எங்களின் பொறுப்பு. அவர்களது சுகாதாரம், வாழ்வாதாரம், நலன் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்ள எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம். அவர்கள் பாதுகாப்புடன் உங்களிடம் வந்து சேர்வார்கள்," என்றார்.

தொடர்ந்து தம் உரையில் மூத்த சிங்கப்பூரர்களுக்கும் முக்கிய வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் லீ.வீட்டில் முடங்கிக் கிடப்பதால் அமைதியில்லாமல் எரிச்சல் ஏற்படும் என்றும் மூத்த குடிமக்களில் தாமும் ஒருவர் என்ற முறையில் தம்மால் முதியவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் திரு லீ கூறினார். முதியவர்கள் தங்களின் நண்பர்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைச் சந்திக்கவும் உடற்பயிற்சி செய்யவும் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவும் விரும்புவர். ஆனால் கொவிட்-19 கிருமித்தொற்றால் எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையில் வயதானவர்கள் உள்ளதால் அவர்களுக்கு கொவிட்-19 கிருமி தொற்றினால் அது கடுமையாக இருக்கும் என்றும் கிருமி பாதிப்பால் இறக்கும் சாத்தியமும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார் திரு லீ.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், தங்களின் குடும்பத்தாருக்கும் ஒத்த வயது நண்பர்களுக்கும் கிருமியைப் பரப்பி அவர்களையும் அபாயத்தில் சிக்க வைத்திடலாம் என்று சுட்டினார். இந்நிலை ஏற்படாமல் இருக்க, வயதானவர்கள் தங்களின் வீட்டில் இருந்தவாறு குடும்பத்தாருடன் பொழுதைக் கழிக்கலாம் என்றும் தங்களுக்கு விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம் என்றும் பிரதமர் லீ சொன்னார்.

முடிந்தவரை வீட்டை விட்டு வெளியேறாமல் தேவையான பொருட்களைப் பிறர் மூலம் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். வேறு வழியின்றி வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், முகக்கவசம் அணிவதுடன் பிறருடன் பாதுகாப்பான ஓர் இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அவர் கூறினார்.

இதுவரை இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த அறுவரும் 64 வயதுக்கும் 88 வயதுக்கும் இடைப்பட்ட முதியவர்கள் ஆவர்.