வெளிநாட்டு பணிப்பெண்கள் ஓய்வு நாட்களில் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. சாப்பாடு வாங்கி வருவது போன்ற முக்கியமான காரியங்களுக்காக வெளியே செல்ல வேண்டி இருந்தால் செல்லலாம். ஆனால் அவர்கள் வேலையை முடித்துக்கொண்டு உடனடியாக வீட்டிற்குத் திரும்பிவிட வேண்டும்.
எந்தவொரு பொது இடத்திலும் சுற்றித் திரியக் கூடாது. கூட்டம் கூடக்கூடாது என்று அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது. ஓய்வு நாளில் பணிப்பெண்கள் வெளியே சென்றால் அந்தப் பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதற்கு முதலாளிகள்தான் பொறுப்பேற்க வேண்டி இருக்கும் என்று அறிக்கை ஒன்றில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பணிப்பெண்கள் வேலைகளை முடித்துக்கொண்டு உடனடியாக வீட்டிற்குத் திரும்பிவிடுவதை முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய வேலைகளுக்காக வெளியே செல்லும்போது பணிப்பெண்கள் கட்டயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
பணிப்பெண்கள் வழக்கமாக ஒன்று திரளும் இடங்களில் கடந்த சில வாரங்களாகக் கூட்டம் கணிசமான அளவுக்குக் குறைந்து இருக்கிறது என்பது அமைச்சின் சோதனை மூலம் தெரிய வந்து இருக்கிறது. இருந்தாலும் சில இடங்களில் சிறிய அளவில் இன்னமும் பணிப்பெண்கள் கூடுவதாகத் தெரிகிறது. இது கொரோனா கிருமித்தொற்று பரவுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடும் என்று அமைச்சு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

