விதிமுறைகளை முதல் முறை மீறுவோருக்கு $300 அபராதம்

விதிமுறைகளை முதல் முறை மீறுவோருக்கு $300 அபராதம்

2 mins read
3e39e201-9150-4452-aebd-5ab38e13f1ef
-

சமூகத்தில் பாதுகாப்பான ஒரு மீட்டர் இடைவெளி விதியை மீறியதற்காக 40 அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் இதன் தொடர்பில் 3,100 கடும் எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இன்றிலிருந்து ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியை முதல் முறையாக மீறுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் குற்றம் புரிவோர் அதிக அபராதத்தையோ அல்லது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டையோ எதிர்பார்க்கலாம் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 40 அபராதங்கள் விதிக்கப்பட்டதாகவும் 2,900 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் சுற்றுப்புற, நீர்வள அமைச்சு தெரிவித்திருந்தது.அங் மோ கியோவில் முகக்கவசங்களை சட்டவிரோதமாக விற்ற தற்காக ஒருவருக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்தக் காரியத்தை உடனே நிறுத்தும்படி உத்தரவிடப்பபட்டது.

இடத்தை விட்டு கலைந்து செல்லும்படி அதிகாரிகள் கூறியதைக் கேட்காமல் சிலர் நடந்து கொண்டனர். இத்தகைய 20க்கும் அதிக சம்பவங்கள் நிகழ்ந்த இடத்துக்கு போலிசை அழைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் ஒப்பனை நிலையம் ஒன்று உரிமம் இல்லாமல் உடற்பிடிப்பு சேவை அளித்து வந்ததை போலிசார் கண்டனர். இது பற்றி புலன்விசாரணைதொடர்வதாக அமைச்சு தெரிவித்து உள்ளது.

வார முடிவு விடுமுறை தொடங்கியதுமே அக்கம்பக்க நிலையங்களுக்கும் சந்தைகள், அங்காடி நிலையங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களுக்கும் சென்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தீவு முழுவதும் வெள்ளிக்கிழமை 2,800 பேருக்கும் அதிக அமலாக்க அதிகாரிகளும் தூதுவர்களும் பணியில் பிரித்துவிடப்பட்டனர். அவர்களோடு, தேசிய பூங்காக் கழகத்தின் ஊழியர்களும் பூங்காக்கள், தோட்டங்கள், காட்டுப் பகுதிகள் போன்ற இடங்களில் ஒரு மீட்டர் இடைவெளி விதியை மக்கள் மீறவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

ஒரு மாத கால அதிரடி முடக்கத்தின்போது நடப்பில் உள்ள விதிகளையும் நிபந்தனைகளையும் பொதுமக்கள் மிக முக்கியமான தாகக் கருதவேண்டும். குடும்பத்தோடு சேர்ந்து வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, முதியவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.