பிரதமர் லீ சியன் லூங் தமிழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்த அந்தப் பதிவில் திரு லீ, சீக்கியர்களுக்கு வைசாகி, மலையாளிகளுக்கு விசு, வங்காளிகளுக்கு பொஹெலா பொய்ஷாக் ஆகிய வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
பல்வேறு தெற்காசிய சமூகங்கள், சிங்கப்பூரில் நீண்ட வரலாற்றைக் கொண்டதாகத் தெரிவித்த பிரதமர் லீ, இவற்றில் தமிழ்ச் சமூகம் ஆகப் பெரியது என்றாலும் மலையாளிகள், சீக்கியர்கள், வங்காளிகள் உள்ளிட்டோரின் சமூகங்களும் இங்கு தழைத்து வருவதாக இன்று வெளியிட்ட அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.
சிலாட் ரோடு சீக்கிய ஆலயம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம் ஆகியவற்றின் படங்களைத் திரு லீ தமது பதிவுடன் இணைத்திருக்கிறார்.
பதிவின் தமிழ் பகுதி:
தெற்காசிய சமூகங்கள் பல, சிங்கப்பூரில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. நமது ஆகப் பெரிய தெற்காசிய சமூகம், தமிழர் சமூகம். அவர்களுடன், வளமான மலையாள, சீக்கிய, வங்காள சமூகங்களும் உள்ளன. சீக்கியர்கள் வைசாக்கியைக் கொண்டாடுகின்றனர். மற்ற சமூகத்தினர் இன்றும் நாளையும், தத்தம் புத்தாண்டுகளை அனுசரிப்பார்கள்.
கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும் வேளையில், கொண்டாட்டங்கள் நடைபெற முடியாவிட்டாலும், நமது ஒற்றுமை உணர்வு மேலோங்கியிருக்கிறது. அனைத்து இனங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்களும் தத்தம் வழிகளில் அதனை வெளிப்படுத்துகிறார்கள்.
அனைத்து, சீக்கியர்களுக்கும் வைசாக்கி தின வாழ்த்துகள்; மலையாளிகளுக்கு விஷு தின வாழ்த்துகள்; வங்காளிகளுக்கு பொஹெலா பொய்ஷாக் தின வாழ்த்துகள்; தமிழர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! - லீ சியன் லூங். - LHL

