கொவிட்-19 தொடர்பில் தொடங்கப்பட்ட தற்காலிக நிவாரண நிதித் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவ்வாறு செய்வோர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். இன்று காணொளி வழி செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு பேசினார் திரு சண்முகம்.
'கொவிட்-19 தற்காலிக நிவாரண நிதி' திட்டத்திற்குத் தகுதிபெறுவதற்கான விண்ணப்ப வழிமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. விரைவாக உதவி கிட்ட வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றார் அமைச்சர் சண்முகம். குறைந்த அல்லது நடுத்தர வருமானம் ஈட்டும் சிங்கப்பூர்வாசிகள், கொவிட்-19 நெருக்கடியால் தங்களின் வேலைகளை இழந்திருந்தால் $500 உதவித்தொகையைப் பெற இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
"உதவித்தொகை தேவைப்படும் பெரும்பாலானோர் முறைப்படி விண்ணப்பிக்கின்றனர். அதுதான் இத்திட்டத்திற்குத் தகுதிபெறுவதற்கான வழி. ஆனால் சிலர் இதைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் மீது நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். அவ்வாறு எடுக்காவிட்டால் மற்றவர்களும் தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்ய ஊக்குவிப்பது போலாகிவிடும்," என்றார் அவர்.
இத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்பவர்களை ஆராயும்படி போலிசாரிடம் கூறியுள்ளதாகவும் இந்த நிதித் திட்டத்தைத் தவறாக பயன்படுத்திய சிலர் தற்போது விசாரணையில் உள்ளதாகவும் தெரிவித்தார் அமைச்சர் சண்முகம்.
41 வயது இணையவாசி ஒருவர் நிவாரண நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் நேற்று அமைச்சுக்கும் போலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எந்த ஆதார ஆவணங்களுமின்றி தனக்கு உதவித்தொகை எளிதில் கிடைத்துவிட்டதாக அந்த நபர் இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து நபர் விசாரணையில் உள்ளதாக கூறப்பட்டது.
தற்காலிக நிவாரண நிதிக்கான விண்ணப்பம், ஒன்று முதல் மூன்று நாட்களுக்குள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தகுதிபெறுவோருக்கு காசோலையாக அல்லது வங்கி மூலமாக உதவித்தொகை வழங்கப்படும்.
திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறையில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நீக்குப்போக்குடன் நடந்துகொண்டு வருகிறது. விண்ணப்பத்திற்கு ஆதரவாகத் தேவைப்படும் பத்திரங்களில் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஏப்ரல் 1 முதல் 300,000க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்திற்குத் தகுதிபெற விண்ணப்பித்துள்ளனர்.

