சமய ஆசிரியரான நாதியா ஹனிம், பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பு எச்1என்1 காய்ச்சலால் அவதியுற்றார். அப்போது அவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பினார். இப்போது உலக நாடுகளில் பரவிவரும் கொவிட்-19 நோயும் அவரை விட்டுவைக்கவில்லை. சிங்கப்பூரரான 36 வயது நாதியாவுக்கு கடந்த மாதம் 13ஆம் தேதி கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
தமது மகளின் நான்காவது பிறந்தநாளான மார்ச் 11ஆம் தேதி தமக்கு உடல்நலம் குன்றியதை அவர் நினைவுகூர்ந்தார். வேலை காரணமாக ஜகார்த்தாவுக்குச் சென்ற திருமதி நாதியா, மூன்று நாட்களுக்கு முன்புதான் நாடு திரும்பினார். அவருக்கு காய்ச்சலுடன், தலைவலியும் உடல்வலியும் ஏற்பட்டன. அடுத்த நாள், அவரது உடல் வெப்பநிலை 39.2 டிகிரி செல்சியசாக உயர்ந்தது. அவருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்சினை உடைய திருமதி நாதியா, சிகிச்சை பெற சாங்கி பொது மருத்துவமனைக்குச் சென்றார்.
மார்ச் 13ஆம் தேதி அவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
நான்கு, எட்டு வயதில் இரு பிள்ளைகளுக்குத் தாயாரான திருமதி நாதியா, "சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாமல் அதிர்ச்சியில் உறைந்து போனேன். "எனக்குப் பதற்றம் ஏற்பட்டது. எவருடன் எல்லாம் நெருங்கிய தொடர்பில் இருந்தேன் என்பதை நினைவுகூர முயன்றேன். அதேவேளையில், எனது பிள்ளைகள், கணவரின் நிலைமை என்னவாகும் என்பதையும் நினைத்துப் பார்த்தேன்," என்றார்.
அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மார்ச் 26ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டனர். குறிப்பாக, பிள்ளைகளுக்குக் கிருமி தொற்றிவிடக்கூடாது என்று தினமும் இறைவனிடம் தாம் பிரார்த்தித்தை திருமதி நாதியா நினைவுகூர்ந்தார். நல்ல வேளையாக, அவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் கிருமி தொற்றவில்லை. இந்நிலையில், திருமதி நாதியாவுக்கு நடத்தப்பட்ட ஊடுகதிர் பரிசோதனையில், அவரது நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. கிருமித்தொற்று பரிசோதனையும் அவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதை உறுதிசெய்ய, மருத்துவமனையில் கழிவறை வசதியுடன் கூடிய தனியறைக்கு அவர் அனுப்பப்பட்டார். ஒரு சில நாட்கள் கழித்தும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகியவை அவருக்குக் குறையவில்லை. நாள் போகப் போக, நோயின் தீவிரம் கூடியது. குமட்டல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகளும் அவருக்கு ஏற்பட்டன.
இரு வாரங்கள் கழித்த பிறகுதான் திருமதி நாதியாவின் உடல்நிலை மேம்பட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் அவருக்கு இருமுறை நாசி திரவப் பரிசோதனை செய்யப்பட்டது. திருமதி நாதியாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதைப் பரிசோதனை முடிவுகள் உறுதிசெய்த பிறகே அவர் மார்ச் 29ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
அந்தத் தருணமே தமது வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம் என்று திருமதி நாதியா உருக்கமாகக் கூறினார். கொரோனா கிருமித்தொற்றால் ஏற்படும் பாதிப்பை எவரும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே தமது அனுபவத்தை மக்களுடன் பகிர விரும்பியதாக அவர் விவரித்தார்.
குறிப்பிடும்படியாக, மருத்துவமனையில் தம்மைக் கவனித்துக்கொண்ட அனைத்து சுகாதாரப் பராமைப்பு ஊழியர்களுக்கு தமது நெஞ்சார்ந்த நன்றியை திருமதி நாதியா தெரிவித்துக்கொண்டார்.
"எனக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருந்தாலும், ஒருமுறைக்கூட என்னை சுகாதார ஊழியர்கள் வித்தியாசத்துடன் பார்த்ததில்லை. அவர்கள் சோர்வாகக் காணப்பட்டாலும் என்னைப் புன்முறுவலுடன் நலம் விசாரிப்பர்," என்று அவர் கூறினார்.

